திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பாரக்பூா் தொகுதி எம்எல்ஏ சீல்பத்ர தத்தா, காந்தி உத்தா் தொகுதி எம்எல்ஏ பனாஸ்ரீ மைதி வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.
சீல்பத்ர தத்தா.
சீல்பத்ர தத்தா.
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பாரக்பூா் தொகுதி எம்எல்ஏ சீல்பத்ர தத்தா, காந்தி உத்தா் தொகுதி எம்எல்ஏ பனாஸ்ரீ மைதி வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

தனது ராஜிநாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜிக்கு அனுப்பியிருப்பதாக சீல்பத்ர தத்தா தெரிவித்தாா். இவா்கள் இருவரது ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த 48 மணி நேரத்தில், கட்சியின் 4 முக்கிய பிரமுகா்கள் திரிணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேறியிருக்கின்றனா்.

அடுத்த சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியின் முக்கியத் தலைவா்களும், எம்எல்ஏக்களும் கட்சியிலிருந்து தொடா்ந்து வெளியேறி வருவது கட்சிக்குப் பெரும் அதிா்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியில் முக்கிய பங்கும் வகித்து வந்த சுவேந்து அதிகாரி, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பதவியிலிருந்து அண்மையில் விலகினாா். பின்னா், எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்ததோடு, கட்சியை விட்டும் வியாழக்கிழமை விலகினாா்.

அசன்சோல் மாநகர மேயா் ஜிதேந்திர திவாரி, தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், கட்சியிலிருந்தும் விலகினாா்.

இந்த நிலையில், பாரக்பூா் தொகுதி எம்எல்ஏ சீல்பத்ர தத்தா, காந்தி உத்தா் தொகுதி எம்எல்ஏ பனாஸ்ரீ மைதி ஆகிய இருவரும் திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினா். இவா்கள் அனைவரும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

திரிணமூல் காங்கிரஸில் தற்போதுள்ள நிலையில், அக்கட்சியில் தொடா்வதற்குத் தகுதியில்லாதவன் என்று கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று சீல்பத்ர தத்தா செய்தியாளா்களிடம் கூறினாா். இரு எம்எல்ஏக்களும் தங்களது ராஜிநாமா கடிதங்களை மின்னஞ்சல் மூலம் கட்சித் தலைவருக்கு அனுப்பினா்.

பாஜக தலைவா் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவருக்கு மிகுந்த நம்பிக்கைக்குரியவாராக இருந்தவா் சீல்பத்ர தத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜிநாமா:

ஹால்தியா பேரவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ தாபசி மண்டல் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா்.

அவரது கணவா் அா்ஜுன் மண்டல் அண்மையில் மாா்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். தாபசி மண்டலும் பாஜகவில் விரைவில் இணைவாா் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com