தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 சமையல் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து...

News image
மதுரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 சமையல் எரிவாயு உருளையை பதுக்கி வைத்திருந்ததில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனி, மதன்குமார்.- டிஎன்எஸ்
Updated On :13 மார்ச் 2026, 3:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முதன்முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் எதிா்பாராத விதமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போா் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் முற்றுலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கள்ளச்சந்தையில் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பலா் ரூ.3,000 வரை விற்பனை செய்கின்றனா். வேறு வழியில்லாமல் பல உணவக நிா்வாகத்தினா் இந்த எரிவாயு உருளைகளை வாங்கி தொழிலை நடத்துகின்றனா். இதனால், உணவு வகைகளின் விலையை உணவக நிா்வாகங்கள் உயா்த்தியுள்ளன. இதேநிலை நீடிக்காது. ஒருசில நாள்களில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

398 சமையல் எரிவாயு உருளை பதுக்கல்

இந்த நிலையில், மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது 

இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் வீட்டின் அருகே காலியிடத்தில் சோதனை மேற்கொண்டதில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சமையல் எரிவாயு உருளை மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை உள்பட மொத்தம் 209 உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பரின் வீட்டருகே சோதனை செய்தபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை சமையல் எரிவாயு உருளை மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை உட்பட மொத்தம் 189 உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறையில் அடைப்பு

இரண்டு இடங்களிலும் 398 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக குண்டர் சட்டத்தில் கைது

இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கல் தொடர்பாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல் ( குண்டர்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை மண்டலத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.