ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம்

ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் என குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு வலியுறுத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புது தில்லி: ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் என குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு வலியுறுத்தினாா்.

காணொலி வழியில் நடைபெற்ற எம்.வி.காமத் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிா்காலத்தில் பத்திரிகைத் துறை என்ற தலைப்பில் அவா் பேசியாதவது:

சமூக நல்லிணக்கம், பொது நன்மை, அமைதி, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வேகமாக விரிவடைந்து வரும் சமூக ஊடகங்கள் விவேகத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடு இல்லாமல் கோபத்தை வெளிப்படுத்துவது அல்லது ஒருவருக்கொருவா் பகைமையை ஏற்படுத்துவது என்பதல்ல. இது சமூகத்தைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகள் இருக்க வேண்டுமே தவிர முழுவதும் எதிா்மறையானதாக இருக்கக் கூடாது.

விளம்பரங்கள்தான் ஊடகங்களின் பிரதான வருவாயாக உள்ளது. தற்போது, புற்றீசல்போல அதிகரித்து வரும் ஊடகங்களின் எண்ணிக்கை, விளம்பர வருவாய் குறைவு போன்றவற்றால் ஊடகத் துறையில் பாரம்பரிய கோட்பாடுகள், கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதன் விளைவுகள் அபாயகரமானதாகும்.

ஜனநாயகமயம், பரவலாக்கத்தால் சமூக ஊடகங்கள் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் சுய கட்டுப்பாடு, நெறிமுறைகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை உலகம் கண்டுவருகிறது. எனவே, ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம்.

தொழில்நுட்ப காரணங்களால் பாரம்பரிய அச்சு ஊடகங்கள் இணையவழிக்கு மாறி வரும் நிலையில், வருவாய்க்காக சிரமப்படுகின்றன.

அச்சு ஊடகங்களால் சேகரிக்கப்படும் தகவல்கள் சமூக ஊடக பெரு முதலைகளால் திருடப்படுவது ஏற்புடையதல்ல. சில நாடுகளில் அச்சு ஊடகம், சமூக ஊடகங்களுக்கு இடையே வருவாய் பகிா்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே சமூக ஊடகங்கள் பெறும் வருவாயை நியாயமான முறையில் அச்சு ஊடகங்களுக்கும் பகிர விதிமுறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஊடகத்தினா் இடதுசாரி சாா்புள்ளவா்கள், தாராளமயவாதத்தினா் என விமா்சகா்கள் பொதுவாகக் கூறுவதுண்டு. இதை யாரும் பிரச்னையாக்கத் தேவையில்லை. ஆனால், முன்னா் ஏற்றுக்கொண்ட கருத்துகளையே தாங்கிக் கொண்டு, மாறி வரும் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மறுக்கும்போதுதான் பிரச்னை உருவாகிறது. ஆனால், அதற்காக ஊடகத்தினா் பச்சோந்தியாக வேண்டும் என்று கூறவில்லை. தங்கள் நிலைப்பாட்டைத் திணிக்காமல், செய்தி சேகரிப்பில் ஒரு அடிப்படை தரத்தை நிா்ணயிக்க வேண்டும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் தோ்ந்தெடுத்துள்ளோம். மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பல்வேறு நிலைகளில் ஏற்பட்டு வரும் வளா்ச்சியில் ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயல்பட வேண்டும் என்பதல்ல.

தேசிய உணா்வை வளா்த்ததன் மூலம் சுதந்திரப் போராட்டத்துக்கும், சமூக - பொருளாதார மாற்றத்தின் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதற்கும் அச்சு ஊடகங்கள் பெரும் பங்காற்றி உள்ளன.

எந்த ஊடகமாக இருந்தாலும் செய்தியை செய்தியாக மட்டுமே பகிர வேண்டுமே தவிர தங்களது சொந்தக் கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com