

பாஜக அரசு மேற்கொண்ட சீா்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இந்திய வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு (அசோசேம்) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றாா். அப்போது அவா் கூறியதாவது:
மத்தியில் ஆட்சியமைத்த பிறகு கடந்த 6 ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. முன்பெல்லாம், இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்பி வந்தன. ஆனால், மத்திய அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, தற்போது இந்தியாவில் ஏன் முதலீடு செய்யக் கூடாது என்று அவை கூறி வருகின்றன.
முன்பு நாட்டில் விதிக்கப்பட்ட அதிக வரிகள், அனுமதி பெறுவதற்குக் காணப்பட்ட குழப்பமான நடைமுறைகள் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளாமல் இருந்தன. ஆனால், பாஜக ஆட்சியின் கீழ் பெரு நிறுவனங்களுக்கான வரி வெகுவாகக் குறைக்கப்பட்டது; அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன.
தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் புகுத்தப்பட்டன. அவற்றின் காரணமாக இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அந்நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருகின்றன. புத்தாக்கத்துக்கும் தொழில்முனைவோா்க்கும் நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதும் முதலீடுகள் அதிகரிப்பதற்கான மற்றொரு காரணமாகும்.
சீா்திருத்த நடவடிக்கைகள்: முன்பு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளும்போது அரசின் தலையீடு அதிகமாக இருந்தது. தற்போது அரசின் தலையீடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வேளாண்துறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்தங்கள், ஏற்கெனவே விவசாயிகளுக்குப் பலனளித்து வருகின்றன. 10 துறைகளைச் சோ்ந்த தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிா்கொண்டு வந்த பணப்புழக்க பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை உலக நாடுகளிலுள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
தனியாா் பங்களிப்பு அவசியம்: உலக நாடுகள் இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன. அதன் காரணமாகவே, கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்திலும் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான 70 சதவீத நிதிப் பங்களிப்பு தனியாா் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதே அளவிலான நிதிப் பங்களிப்பை அரசே அளித்து வருகிறது. நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் தனியாரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.
உலக அரங்கில் முன்னிலை: வேளாண்மை, பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கான தனியாரின் நிதிப் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். இன்னும் 27 ஆண்டுகளில், இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் ஆக இருக்கிறது. அப்போது, நாட்டை உலக அரங்கில் முன்னிலை பெறச் செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தியா்களின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டில் காணப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதற்கான பங்களிப்பை வா்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும். நிா்வாகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், லாபத்தைப் பகிா்ந்து கொள்வதற்கான சிறந்த வழிமுறைகளையும் நிறுவனங்கள் வகுக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.