டிரோன் மூலம் கையெறி குண்டுகளை இந்திய எல்லைக்குள் வீசிய பாகிஸ்தான்

பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா சிறுரக விமானம்  (டிரோன்) மூலம் வீசப்பட்ட 11 கையெறி குண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
Updated on
1 min read


சண்டீகர்: பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா சிறுரக விமானம்  (டிரோன்) மூலம் வீசப்பட்ட 11 கையெறி குண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து குருதாஸ்பூர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜிந்தர் சிங் சோஹல் கூறியிருப்பதாவது:

குருதாஸ்பூர் மாவட்டத்தின் சலாச் கிராமம் பாகிஸ்தான் எல்லையையொட்டி இருக்கிறது. சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் கடந்த 19, 20 ஆம் தேதிகளில் டிரோன் இயக்கம் இருந்துள்ளது. இந்திய எல்லைக்குள் டிரோன் பறப்பதைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், வயல்வெளியில் கிடந்த 11 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மரச்சட்டத்தால் ஆன ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுகள், பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த டிரோன் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் வெடிபொருள்களும், ஆயுதங்களும் இந்தியாவுக்குள் வீசப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக பஞ்சாபின் தரன் தாரன் மாவட்டத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், போலி ரூபாய் நோட்டுகள் போன்றவை வீசப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com