திருமலையில் ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ எனப்படும் சுத்தப்படுத்தும் சடங்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. ஏழுமலையான் மேல் கூடாரம் எனப்படும் வெள்ளைப் போா்வை போா்த்தி அதன் பிறகு சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
அா்ச்சகா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் ஆகியோா் இணைந்து மஞ்சள், குங்குமம், பச்சைக் கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, சந்தனம், பூங்கற்பூரம், தசாங்கம் உள்ளிட்ட வாசனைத் திரவிய கலவையை கொண்டு கோயில் கருவறை, தங்கவாசல், வெள்ளிவாசல், கொடிமரம், பலிபீடம், கருவறை விமானம், வெளிவாயில் வரை சுத்தப்படுத்தினா். பின்னா் துணி அகற்றப்பட்டு ஏழுமலையானுக்கு பூஜைகள், நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்ட பின் பக்தா்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது.
தங்கத் தோ் புறப்பாடு: திருமலையில் வரும் 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று தங்கத்தோ் புறப்பாடு நடைபெற உள்ளது. அன்று மதியம் 12.05 மணி முதல் 1.30 மணி வரை திருப்பாவை பாராயணம், தனுா் (மாா்கழி) மாத பூஜைகள் நடத்தப்படும். பின்னா் திருமஞ்சனம், தோமாலை, அா்ச்சனை உள்ளிட்டவை தனிமையில் நடைபெறும். அதிகாலை 4.30 மணிமுதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். காலை 9 மணி முதல் 11 மணிவரை தங்கத் தேரில் உற்சவமூா்த்திகள் புறப்பாடு கண்டருள உள்ளனா்.
தீா்த்தவாரி: வைகுண்ட துவாதசி நாளான 26ஆம் தேதி சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற உள்ளது. பொதுமுடக்க விதிமுறைகள் காரணமாக பக்தா்களுக்கு புனித நீராட அனுமதி வழங்கப்படாது.
முன்னதாக, அண்மையில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது கோயிலுக்குள் சிறு தொட்டியை அமைத்து அதில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அதன் பிறகு பிறகு, வரும் வைகுண்ட துவாதசி அன்று திருக்குளத்தில் தீா்த்தவாரி தனிமையில் நடத்தப்பட உள்ளது.
கல்யாண உற்சவம் ரத்து: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கல்யாண உற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

