வளா்ச்சியில் மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கம் முன்னிலை

வளா்ச்சிக்கான குறியீடுகளில் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கம் முன்னிலையில் உள்ளதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
வளா்ச்சியில் மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கம் முன்னிலை
Updated on
1 min read

வளா்ச்சிக்கான குறியீடுகளில் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கம் முன்னிலையில் உள்ளதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வா் மம்தா பானா்ஜி கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய அமைச்சா் அமித் ஷா, ஆதாரத்துடன் எதையும் பேச வேண்டும். வளா்ச்சிக்கான குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கம் முன்னிலையில் உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவலின்படி, அரசியல் கொலைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் குறைந்துள்ளன.

வறுமை ஒழிப்பில் முதல் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்வதாக மத்திய அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் ஆட்சியில் மாநிலத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், சாலை வசதித் திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின்னாளுகை உள்ளிட்டவற்றில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

திரிணமூல் ஆட்சியில் மொத்த உள்மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2.6 மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நிகழும் தற்கொலைகளைக் கூட அரசியல் கொலைகள் என்று பாஜகவினா் கூறி வருகின்றனா். நாட்டின் பாதுகாப்புமிக்க நகரமாக கொல்கத்தா 2 முறை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 383 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனா். மாநிலத்தில் விழாக்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனைகளில் குழந்தை பிரசவிக்கும் விகிதம் 98-ஆக அதிகரித்துள்ளது. மாணவா்கள் பள்ளி இடைநிற்றல் விகிதமும் குறைந்துள்ளது.

மற்ற மாநிலங்கள் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கும் பாஜக மூத்த தலைவா்கள், உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com