

வேளாண் சட்டங்களுக்கு எதிரான சிறப்புப் பேரவைக்கூட்டத்திற்கு கோரப்பட்ட அனுமதியை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 28 நாள்களாக தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் ஆதரவளித்து வரும் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது மாநில சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளத்தில் ஆளும் இடது முன்னணி அரசின் சார்பில் வேளாண் சட்டங்களைக் குறித்து விவாதிப்பதற்காக டிசம்பர் 23ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் பினராயி விஜயன் ஆளுநர் ஆரிஃப் முகமதுகானிடம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும் முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு கடிதம் எழுதிய முதல்வர் பினராயி விஜயன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் அமைச்சரவையின் கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சட்டமன்றத்தை குறுகிய கால அறிவிப்பில் கூட்டுவது குறித்த எனது அடிப்படை கேள்விக்கு பதிலளிக்காததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.