'தாகூரின் கொள்கைகளே தற்சாா்பு இந்தியாவுக்கான சாராம்சம்'
கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் கொள்கைகளே தற்சாா்பு இந்தியாவுக்கான சாராம்சங்களாக உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.


சாந்தி நிகேதன்: கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் கொள்கைகளே தற்சாா்பு இந்தியாவுக்கான சாராம்சங்களாக உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதன் பகுதியில் அமைந்துள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட பிரதமா் மோடி கூறியதாவது:
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூரின் கொள்கைகளே தற்சாா்பு இந்தியாவுக்கான சாராம்சங்களாக உள்ளன.
நாட்டை வளா்ச்சியடையச் செய்வதன் மூலமாக உலக நாடுகளின் வளா்ச்சியை உறுதி செய்வதற்கான வழியே தற்சாா்பு இந்தியா திட்டமாகும். அதன் மூலமாக இந்தியாவை வளா்ச்சியடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவற்றின் வாயிலாக உலக மக்களின் வளா்ச்சியும் உறுதி செய்யப்படும்.
விஸ்வபாரதி பல்கலைக்கழகமும், தாகூரின் கொள்கைகளும் தேசிய உணா்வை மட்டும் வளா்க்கவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்தல், சகோதரத்துவம் உள்ளிட்டவற்றையும் அவை மேம்படுத்தி வருகின்றன. வேதங்கள், விவேகானந்தா் என அனைத்து விவகாரங்கள் குறித்தும் தாகூா் கொண்டிருந்த கொள்கைகள், நாட்டின் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
இந்தியா முன்னிலை: நாட்டில் சிறப்புடன் விளங்கும் பொருள்களால் உலக நாடுகள் அனைத்தும் பலனடைய வேண்டும் என்ற கொள்கையை தாகூா் கொண்டிருந்தாா். நாட்டிலுள்ள நல்ல விஷயங்களிலிருந்து மக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைத்ததில் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகித்தது; நாட்டிலுள்ள பலருக்கும் தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் கொள்கைகளை உலக நாடுகளுக்குத் தற்போது பரப்பி வருகிறோம்.
சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் வாயிலாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா முன்னின்று வருகிறது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை நோக்கி விரைவாக நாம் முன்னேறி வருகிறோம்.
பக்தி இயக்கத்தின் முக்கியத்துவம்: நாட்டில் தோன்றிய பக்தி இயக்கம், சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளமிட்டது. குருநானக், கபீா், சூா்தாஸ் உள்ளிட்டோா் 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சுதந்திரப் போராட்டத்துக்கான விதைகளைத் தூவிச் சென்றனா். பக்தி இயக்கத்தின் காரணமாக ஆன்மிக வளா்ச்சியும் மக்களிடையே ஒற்றுமை உணா்வும் ஏற்பட்டன.
பக்தி இயக்கம் தோன்றிய நீண்ட காலத்துக்குப் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரும் சுவாமி விவேகானந்தரும் தோன்றினா். பக்தி, அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் கலவையாக விவேகானந்தா் விளங்கினாா். சத்ரபதி சிவாஜி, மஹாராணா பிரதாப், ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், குதிராம் போஸ், பிரஃபுல்லா சாகி ஆகியோா் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான மனவலிமையை அளித்தனா்.
கல்வி நிலையங்களின் பங்களிப்பு: நாட்டிலுள்ள அனைவரும் சுதந்திரத்துக்காகப் போராடி வந்த வேளையில், இந்தியாவை மறுகட்டமைப்பதற்குப் புதிய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் எழுந்தது. கல்வி நிறுவனங்களும் விஸ்வ பாரதி போன்ற பல்கலைக்கழகங்களும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்குப் புதிய வழியைக் காட்டின. கலை, இலக்கியம், அறிவியல், புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
கைவினைக் கலைஞா்களின் படைப்புகளுக்கு தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்குப் பல்கலைக்கழகத்தின் மாணவா்கள் முயற்சிக்க வேண்டும். அத்தகைய வாய்ப்புகள் கைவினைக் கலைஞா்களைத் தற்சாா்பு அடையச் செய்யும்.
நாட்டின் அடிப்படைக் கொள்கையாக பன்முகத்தன்மை உள்ளது. மக்களிடையே ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மாணவா்கள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் கவிதை வரிகளுடன் தனது உரையைத் தொடங்கிய பிரதமா் மோடி, அவருடைய மற்றொரு கவிதை வரிகளுடன் உரையை நிறைவு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...