வடகிழக்கில் வளர்ச்சி பிரவாகத்தை கொண்டுவந்த பிரதமர் மோடி: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களை தனது இதயத்தில் வைத்திருக்கிறார்;
வடகிழக்கில் வளர்ச்சி பிரவாகத்தை கொண்டுவந்த பிரதமர் மோடி: அமித் ஷா பெருமிதம்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களை தனது இதயத்தில் வைத்திருக்கிறார்; ஆதலால் இந்தப் பிராந்தியத்தில் வளர்ச்சி பிரவாகத்தை அவர் கொண்டுவந்துள்ளார் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
 மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அமித் ஷா மேலும் பேசியது:
 வடகிழக்கு பிராந்தியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. ஆதலால் இப்போது இந்தப் பிராந்தியம் வளர்ச்சியின் புதிய உத்வேகத்தை அனுபவித்து வருகிறது. முன்னர், கிளர்ச்சி, பந்த் போன்றவற்றால்தான் மணிப்பூர் அறியப்பட்டது. இப்போது பெரும்பாலான பயங்கரவாத அமைப்புகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டன. மீதமுள்ளவர்களும் பாஜகவின் முயற்சியால் இணைவார்கள்.
 மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துவிட்டது. முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில், இம்மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. மணிப்பூருக்கு "இன்னர்லைன் அனுமதி' அளிக்கப்பட்டது இம்மாநில மக்களுக்கு பிரதமர் அளித்த மிகப்பெரிய பரிசு என்றார் அவர்.
 வடகிழக்கு மாநிலங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித் ஷா, சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை குவாஹாட்டியிலிருந்து மணிப்பூர் வந்தடைந்தார். இங்கு ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 7 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ஓர் அணை, சாலைத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
 காமாக்யா கோயிலில் அமித் ஷா வழிபாடு
அஸ்ஸாம் மாநிலத்தில் நீலாசல் மலை உச்சியில் உள்ள சக்திபீடமான காமாக்யா கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிபட்டார்.
 வடகிழக்கு மாநிலங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது 3 நாள் பயணத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால், நிதி அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் சென்றனர்.
 முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அஸ்ஸாம் வந்த அமித் ஷா, சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் நான்கு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அஜந்தா நியோக், ராஜ்தீப் கோலா ஆகியோரை அமித் ஷா சந்தித்தார்.
 இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் இருவரும் பாஜகவில் சேரப் போவதை உறுதிப்படுத்தினர். மேலும், நடைபெறவுள்ள அஸ்ஸாம் பேரவைத் தேர்தல் தொடர்பாக மாநில பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com