ஷகீன் பாக் போராட்டக்காரர்கள் அமித் ஷாவுடன் நாளை சந்திப்பு?

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கப்போவதாக ஷகீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கப்போவதாக ஷகீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லி ஷகீன் பாக்கில் சிஏஏ-வுக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு யாரும் தலைமை ஏற்காததால் இது மக்களின் போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, தில்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சிஏஏ தொடர்பாக ஏதேனும் விவாதிக்க வேண்டும் என்றால் என்னுடைய அலுவலகத்தை அணுகலாம். மூன்றே நாட்களில் அதற்கான நேரம் ஒதுக்கப்படும்" என்றார்.

இந்நிலையில், சிஏஏ குறித்து நாளை அமித் ஷாவைச் சந்திக்கப்போவதாக ஷகீன் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக்காரர்கள், ஒரு குழுவாக சென்று அமித் ஷாவைச் சந்திப்பதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரைச் சந்திக்கவுள்ளோம் என்றனர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத போராட்டக்காரர் ஒருவர் தெரிவிக்கையில், சிஏஏ-வால் பிரச்னையை எதிர்கொள்ளும் அனைவரும் தன்னை வந்து சந்திக்குமாறு அமித் ஷாவே தொலைகாட்சியில் அழைப்பு விடுத்துள்ளார். எனவே, நாங்கள் அவரை நாளை சந்திக்கவுள்ளோம் என்றார்.

பெண் ஒருவர் தெரிவிக்கையில், அனைத்துப் பெண்களும் நாளை பிற்பகல் 2 மணிக்கு அவரைப் போய் சந்திப்போம் என்றார்.

அதேசமயம், அமித் ஷாவுடன் நாளை இதுபோன்ற சந்திப்புக்கு எதுவும் திட்டமிடப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31, 2014 அல்லது அதற்கு முன்பு வரை மதத் துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) வழிசெய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com