பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீது கடுமையான நடவடிக்கை தேவை: கம்பீர் காட்டம்

தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் எம்பி கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீது கடுமையான நடவடிக்கை தேவை: கம்பீர் காட்டம்


தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் எம்பி கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான மற்றும் ஆதரவான குழுவினர் இடையே தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று (திங்கள்கிழமை) மோதல் வெடித்தது. இதனால், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது என நேற்றிரவு தில்லி பற்றி எரிந்தது. இந்த வன்முறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினர் கௌதம் கம்பீர் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அவர் தெரிவிக்கையில்,

"கபில் மிஸ்ராவாகட்டும், வேறு யாராகவோ இருக்கட்டும், எந்தக் கட்சியை வேண்டுமானாலும் சேர்ந்தவராக இருக்கட்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது யாராக இருந்தாலும் சரி, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார். 

முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா தில்லி காவல் துறையினருக்கு கெடு விதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுரைப் பதிவில் கருத்து தெரிவித்தார். அதில், "ஜாஃப்ராபாத் மற்றும் சந்த் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தில்லி காவல் துறையினருக்கு மூன்று நாள் வழங்கப்படுகிறது. இதன்பிறகும், காரணம் கூறி நியாயப்படுத்த முயற்சிக்காதீர், நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்" என்றார். 

மேலும் விடியோவுடன் கூடிய பதிவில் அவர் குறிப்பிடுகையில், "டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருக்கும் வரையே நாங்கள் அமைதி காப்போம். அதற்குப் பிறகும் சாலைகள் திறக்கப்படவில்லை என்றால் காவல் துறையினர் சொல்வதைக்கூட கேட்க மாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்" என்றார்.

கபில் மிஸ்ராவின் இந்தப் பேச்சு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தில்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவரே திங்கள்கிழமை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "வன்முறை தீர்வைக் காணாது. அனைவரும் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். சிஏஏ-வுக்கு ஆதரவானவர்களாக இருந்தாலும் சரி, எதிரானவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தில்லியின் சகோதரத்துவத்துக்கு எவ்வித இழுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது" என்றார்.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கபில் மிஸ்ரா. ஜாஃபர்பாத் பகுதியில் உள்ள மௌஜ்பூர் சௌக்கில் சிஏஏ-வுக்கு ஆதரவான குழுவினரை கபில் மிஸ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிநடத்தினார். இதன்பிறகே, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com