

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்) எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என ப. சிதம்பரம் இன்று (சனிக்கிழமை) வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"நாட்டு நலனுக்காக சிஏஏ மற்றும் என்பிஆர்-ஐ எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், அது உள்ளடக்கியுள்ள மதிப்புகளைப் பாதுகாக்கவுமே நாம் போராடுகிறோம் என்பதுதான் விரிவான பார்வையாகும். எனவே, இதற்காகப் போராடும் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
முடிந்தளவுக்கு நிறைய கட்சிகளை இணைக்க சோனியா காந்தி முயற்சி செய்தார். அதில் 20 கட்சிகள் பங்கேற்றன. சிலர் பங்கேற்கவில்லை. அதற்காக இது இறுதி முடிவாகிவிடாது. மறுபடியும் ஒரு கூட்டம் நடைபெறலாம். அதில் அவர்கள் பங்கேற்கலாம். நாங்கள் ஒன்றாக போராடுகிறோமா என்பது முக்கியமல்ல. நாங்கள் அனைவரும் போராடுகிறோம் என்பதுதான் முக்கியம். தனித்தனியாக போராடினாலும் அது போராட்டம்தான், ஒன்றிணைந்து போராடினாலும் அது போராட்டம்தான்.
ஆனால், சிஏஏ மற்றும் என்பிஆர்-க்காக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைக் கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். இதில் நாங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளோம். சில கட்சிகள் தனியாக போராடுகின்றன. ஒருநாள் அவர்களும் ஒருங்கிணைந்த தளத்தில் வந்து இணைவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
இதையடுத்து, வரும் காலங்களில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கு மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்,
"என்னைக் கேட்டால், அழைப்பு விடுக்கப்படும். இதில் என்ன தவறு இருக்கிறது? என் வீட்டுக்கு வருமாறு உங்களுக்கு ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் வரவில்லை. அதற்காக நான் உங்களை மீண்டும் அழைக்க மாட்டேன் என்று அர்த்தமாகிவிடாது" என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ-வுக்கு எதிரான கட்சிகளில் ஒற்றுமை இல்லாதது குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
"மேற்கு வங்கம் அல்லது மற்ற மாநிலங்களாகட்டும், அங்கு பிராந்தியக் காரணிகள் உள்ளன. முற்றிலும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் காரணிகள்தான் பிரதானமாக உள்ளன. அதற்காக விரிவான பார்வையை தவறவிடக் கூடாது" என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைய கட்சிகள் இழந்துள்ளன என்பதை மறுத்த ப. சிதம்பரம்,
"கடந்த மக்களவைத் தேர்தலில் 19 சதவீத இந்தியர்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர, ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வாக்குகளைப் பெற்றது.
இருந்தபோதிலும், எங்கள் பக்கம் இன்னும் நிறைய ஆதரவு தேவைப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக எங்களை யாருமே நம்பவில்லை என்று அர்த்தமாகிவிடாது" என்றார்.
முன்னதாக, நாட்டில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு பல்வேறு கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனால், கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி, திமுக மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய முக்கியக் கட்சிகள் பங்கேற்கவில்லை. அதேசமயம், இந்தக் கூட்டத்துக்கு சிவசேனை மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.