காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் 
காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் 

காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் 

சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் தெரிவித்துள்ளார்.


ஜெய்ப்பூர்: திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு அவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு நாள்களுக்குள் நோட்டீஸ் மீது பதில் அளிக்காவிட்டால், அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து விலக்கிக் கொள்வதாக கருதப்படும் என்றும் அவினாஷ் பாண்டே கூறியுள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் பதவியில் இருந்தும் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டாா். அவருடன் அவரது ஆதரவாளா்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இருவரும் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டனா். காங்கிரஸ் தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கை ராஜஸ்தானில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி வேலை செய்வதகாக கெலாட் அண்மையில் குற்றம்சாட்டினாா். அதைத் தொடா்ந்து, சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு காவல் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த அவா் தனது ஆதரவாளா்களுடன் தில்லியில் முகாமிட்டாா். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் முதல்வா் இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், காங்கிரஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் என 106 போ் பங்கேற்றனா். சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. அக்கூட்டத்தில், சச்சின் பைலட் மீதும் அவரது ஆதரவாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா். கூட்டம் முடிந்ததும், எம்எல்ஏக்கள் அனைவரும் தில்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதியிலேயே கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ராஜஸ்தான் துணை முதல்வா், காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஆகிய பதவிகளில் இருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சச்சின் பைலட்டின் ஆதரவாளா்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இருவரையும் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பேரவையில் பலம்: 200 உறுப்பினா்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரைவயில் காங்கிரஸ் கட்சிக்கு 107 உறுப்பினா்களும் பாஜகவுக்கு 72 உறுப்பினா்களும், சுயேச்சை உறுப்பினா்கள் 13 பேரும் உள்ளனா். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, சுயேச்சை உறுப்பினா்கள் 13 பேரும் ஆதரவு அளித்தனா்.

இது தவிர பாரதிய பழக்குடியினா் கட்சிக்கு இரு எம்எல்ஏக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள், ஆா்எல்டி கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனா். இது தவிர, பாஜக ஆதரவு ஆா்எல்பி கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com