யூத் - திரை விமர்சனம்
நடிகர் கென் கதாநாயகனாக நடித்துள்ள யூத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டு கதைக்களம் நிகழ்கிறது. பள்ளி மாணவனான கென் படிப்பில் துளி நாட்டமும் இல்லாமல் பாஸ் ஆகக்கூடிய அளவிற்கே படித்து வருகிறார். அவரின் அம்மாவான தேவதர்ஷினி மகனைச் செல்லமாக வளர்ப்பதுடன் அவர் என்ன செய்தாலும் ஆதரவு கொடுக்கும் அம்மாவாக இருக்கிறார். இதற்கு நேர் எதிரான அப்பாவாக சுராஜ் வெஞ்சரமூடு. மகனைக் கண்டாலே ஆகாது என்கிற அளவிற்கு மட்டம் தட்டிக்கொண்டு இருப்பவர். காரணம், கென்னின் நடவடிக்கைகள் அப்படி!
அழகான பள்ளிகால வாழ்க்கையில் கென்னுக்கு இருக்கும் ஒரே ஆசை, பள்ளியிலிருந்து திருமணம் வரை காதலைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதுதான். அப்படியே, ஒரு காதல் அமைகிறது. தன் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதும் காதலில் மிதப்பதுமாக இருக்கிறார். அச்சூழலில் சில திருப்பங்கள் நிகழ்கின்றன. பள்ளியில் மோசமான பெயர் கிடைக்க இறுதியில் கென் என்னவானார்? அம்மா, அப்பாவுக்கான மகனாக மாறினாரா? இல்லை, காதல்தான் கதியெனக் கிடந்தாரா? என ஒவ்வொரு யூத்தும் தங்கள் வாழ்வில் அனுபவித்த ஒன்றை நகைச்சுவையுடனும் அதேநேரம் உணர்வுப்பூர்வமாகவும் யூத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நடிகராக அறியப்பட்டாலும் கென்னுக்குள் இவ்வளவு திறமைகள் இருக்கிறதா? என ஒவ்வொரு காட்சிகளிலும் அசத்துகிறார். இயக்குநராகவும் கதாநாயகனாகவும் சவாலான பணியை மிக நேர்த்தியாக கென் செய்திருக்கிறார். முக்கியமாக, தன்னைக் கொஞ்சம் எதிர்மறையான கதாபாத்திரமாக முன்னிலைப்படுத்தி இறுதியில் மனமாற்றம் அடையும் வரையிலான திரைக்கதையில் நல்ல ஒழுங்கு இருக்கிறது.
இன்றைய ரசிகர்களுக்கு கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்வதைக் காட்டிலும் அதனை எடிட்டிங் மூலம் மேலும் அழகாக கொண்டு சேர்க்கலாம் என்பதை உணர்ந்தவராக சில காட்சிகளை எடிட்டிங் மூலமே சிரிக்கவும் வைக்கிறார். உதாரணம், இடைவேளைக் காட்சி. கென் தன் நண்பர்களுடன் இணைந்து செய்யும் நகைச்சுவைகள் அனைத்தும் ரசிக்கும்படியாகவே இருப்பதால் முதல் பாகம் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையும் செல்கிறது.
பள்ளிகால காதல் கதையாக இருந்தாலும் முகச்சுழிப்பான வசனங்களோ காட்சிகளோ இல்லாமல் சிறார்களுக்கே உரித்தான கள்ளமின்மை, பெற்றோர்கள் மீதான முன்முடிவுகள் என இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான கதையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பல காட்சிகளில் அரங்கமே கைதட்டி சிரிக்கும்படி அமைந்திருப்பது பலம்.

என்ன குறை? இரண்டாம் பாதியில் சிறிய தொய்வு வருகிறது. காதல் கதையைச் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென குடும்பம் முக்கியம், அம்மா - அப்பாவின் காதலே பெரியது என டான், டிராகன் திரைப்படங்களின் சாயலில் சில விஷயங்கள் நடக்கின்றன. நிறைய வசனங்களைக் கவனமாக எழுதிய கென், அப்பா கதாபாத்திரத்திற்கான காட்சியில் அவன், இவன் என ஒருமையில் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம்.
நடிகராக கென்னுக்கு எல்லா காட்சிகளுமே கை கொடுத்திருக்கின்றன. ஓவராக கொஞ்சம் நடித்தாலும் அது ஓவராக இருக்கிறது என்பதை யோசிக்க வைக்கமால் அடுத்த நகர்வுக்குச் செல்வது என புத்திசாலித்தமான உருவாக்கத்தால் நடிகராகவும் இயக்குநராகவும் கவனம் பெறுகிறார். எந்தக் கோணத்தில் கேமராவை வைத்தாலும் முகமும் பாவனைகளும் பிரம்மாதமாக இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணிடமும் காதல் கொள்ளும் காட்சியில் நம்மையும் புன்னகைக்க வைக்கிறார். தமிழ் சினிமாவிற்குத் தேவையான நாயகன்.
அப்பாவாக அசத்தியிருக்கிறார் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தானாகவே சிரிப்பு வரும் அளவிற்கு வசனங்களில் சேட்டை செய்கிறார். முக்கியமாக, குடித்துவிட்டு தன் முன்னாள் காதலியைக் குறித்து ஆங்கிலத்தில் உலறுவது, மகனுக்கு அறிவுரை சொல்வது என நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாக அதிக மதிப்பெண் பெறுகிறார். அம்மாவான தேவதர்ஷினியைக் காட்டாத உடல்மொழியில் காட்ட வேண்டுமென வேலை வாங்கியிருக்கிறார்கள். அது நன்றாகக் கைகொடுத்திருக்கிறது. அறிமுக காட்சியிலிருந்து இறுதிவரை கதையின் இன்னொரு நாயகியாகவே உலாவுகிறார்.

நாயகிகளான அனிஷ்மா, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் என அனைவரும் அழகிய முகங்கள். ஒவ்வொருவரும் தங்கள் வசனங்கள் மூலம் தனித்துவமாகத் தெரிகின்றனர். முக்கியமாக, மீனாட்சி. சிறை திரைப்படம் மூலம் கவனம் பெற்ற அனிஷ்மாவுக்கு நல்ல கதாபாத்திரம். பள்ளி மாணவியாகவும் நம்ப வைக்கும் தோற்றம்.
ஸ்மார்ட்போன்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாத, கட்டண கணினி மைய முகநூல் காலத்திற்கு அழைத்துச் சென்ற மேக்கிங், ஒளிப்பதிவு, ஜிவியின் இசை என அனைத்தும் கச்சிதமாகவே யூத் திரைப்படத்திற்கு அமைந்திருக்கிறது. பெரிதாக ஹிட் அடித்த முட்ட கலக்கி பாடலின் விடியோ வடிவமும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் புரமோஷன்கள் கொடுத்த எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்யும் நல்ல பொழுதுபோக்கு படமாகவே கைதட்ட வைக்கிறது யூத்!
Summary
actor ken's youth movie review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் படத்தைக் குறிப்பிட்டு பேசிய மம்மூட்டி!
ஓடிடியில் யூத் எப்போது?

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
தெலுங்கிலும் வரவேற்பைப் பெறும் யூத்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


