தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்தியப் பிரதேசத்தில் நடந்து கொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள் : கமல் நாத்

மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள் என்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த கமல் நாத் கூறியுள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2020, 7:52 am

DIN


போபால்: மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள் என்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த கமல் நாத் கூறியுள்ளார்.

போபாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் தனது ராஜிநாமா முடிவை அறிவித்தார்.

அப்போது அவர்  பேசுகையில், நாட்டு மக்கள் அனைவரும் உண்மையை அறிவார்கள்.  எம்எல்ஏக்கள் பெங்களூருவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மை நிச்சயம் வெளிவரும். மக்கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று கமல்நாத் கூறினார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்ததால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜிநாமா கடிதத்தை அவைத் தலைவர் என்.பி. பிரஜாபதி ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். 

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவா்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியிலிருந்து கடந்த வாரம் விலகினாா். அவரது ஆதரவாளா்களான 22 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். அவா்களில் 6 பேரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டு விட்டாா். எஞ்சியுள்ள 16 எம்எல்ஏக்களின் கடிதம் மீது முடிவெடுக்காமல் இருந்தது.

இதனிடையே, பேரவையில் முதல்வா் கமல்நாத் கடந்த திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநா் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தாா். எனினும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மத்தியப் பிரதேச சட்டப் பேரவை மாா்ச் 26-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவா் சிவராஜ் சிங் சௌஹான் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பிலும், காங்கிரஸ் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.