விஷவாயுக் கசிவு ஏற்பட்டது எப்படி? - புதிய தகவல்கள்

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து நிறுவன மேலாளர் விளக்கம் தெரிவித்துள்ளார். 
விஷவாயுக் கசிவு ஏற்பட்டது எப்படி? - புதிய தகவல்கள்

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து நிறுவன மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் எல்.ஜி பாலிமர்ஸ் என்ற தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தொழிற்சாலையில் உள்ள நிலுவை கொள்கலனிலிருந்து பாலீஸ்ட்ரின் தயாரிக்க பயன்படுத்தும் ஸ்ட்ரீன் என்ற வேதி வாயு கசியத் துவங்கியது. இந்த விஷவாயு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5.கி.மீ துாரம் வரை காற்றில் பரவியது. அப்பகுதியில் உள்ள மக்கள் மயக்கமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களை வீடுகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்களை தகுந்த பாதுகாப்புடன் வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் விஷவாயுவை சுவாசித்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மூச்சுத்திணறல் ஏற்பட்ட பலர் 25 ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தற்போது வரை ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் வெகுவாக இந்த விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுடன் வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, எலி உள்ளிட்ட விலங்குகளும் இந்த விஷவாயு தாக்குதலில் பலியாகியுள்ளது.

இந்த வாயுவை சுவாசித்த பலருக்கு தோல் அரிப்பு, தடிப்பு, கண் எரிச்சல், வாந்தி, குமட்டல், மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டது. காற்றில் கலந்துள்ள இந்த விஷவாயுவின் தாக்கத்தை குறைக்க தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இந்த தடுப்பு மருந்து முழுவதும் பரவி விஷவாயுவை கட்டுபடுத்த 4 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மதிய வேளையில் இந்த விஷவாயுவை நுகர்ந்ததால் மயக்கமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். முழுமையாக விஷவாயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் மட்டும் மக்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். 

மக்கள் வெளியேற்றப்பட்ட பின் மத்திய அரசின் உத்தரவுப்படி, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (என்டிஆர்ஏ, என்டிஎம்ஏ) காலை 5.30 மணி முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வீடுகளுக்குச் சென்று மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடற்படையினர் சிறப்பு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி உதவி செய்துள்ளது. ஒரு சிலிண்டர் மூலம் 6 பேருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் பலருக்கும் இந்த விஷவாயு தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புணேவிலிருந்து சிறப்பு மருத்துவ மீட்புக்குழு ஒன்று விசாகப்பட்டினத்திற்கு வரவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிலைமை கட்டுக்குள் அடங்கும் வரை விசாகப்பட்டினத்திலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்.ஜி பாலிமர் ஆலை

விசாகபட்டினத்தில் 1968 ஆம் ஆண்டு இந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1975-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகள் மெக்டோனால்ட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் 1997-ம் ஆண்டு எல்.ஜி பாலிமர்ஸ் என்ற பெயரில் இங்கு 213 ஏக்கரில் தொழிற்சாலை நிறுவப்பட்டு பாலிஸ்ட்ரீன் தயாரிப்பு தொடங்கியது. இங்கு தினசரி 417 டன் பாலிஸ்ட்ரின் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து ஏற்படக் காரணம்

இந்த விஷவாயு கசிவிற்கான காரணம் குறித்து தொழிற்சாலை பொது மேலாளர் மோகன்ராவ் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றினால் அமலுக்கு வந்த பொது முடக்கம் காரணமாக பல நாள்கள் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த 3 நாள்களுக்கு முன் இந்தத் தொழிற்சாலை திறக்கப்பட்டு இங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொழிற்சாலையில் ஸ்ட்ரீன் என்ற வேதிப்பொருள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக 2500 டன் கொள்திறன் கொண்ட 2 கலன்கள் இங்கு உள்ளன. ஒன்று பாதிப்படைந்த நிலையில், ஒன்றில் மட்டுமே 1800 டன் ஸ்டரீன் வாயு உள்ளது. 90 சதவீதம் மட்டுமே கொள்கலனில் வாயு நிரப்பப்படும். இந்த வாயு தொழிற்சாலை பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் ஆவியாதல் முறைப்படி அவை கொள்கலன் மேற்புரத்தில் சேர்ந்தது.

43 நாட்கள் இடைவெளிக்குப் பின் தொழிற்சாலை துவக்கப்பட்டதால் கொள்கலனில் உள்ள ஸ்ட்ரீன் வாயு அருகில் உள்ள ரியக்டருக்கு அனுப்பப்படும் போது அங்குள்ள ஹைட்ரோகார்பனால் வெப்பம் பரவி கொள்திறன் மேற்பகுதியில் சேர்ந்த வாயு மூலமாக கசியத் துவங்கியது. இதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு உடனடியாக அவற்றைக் கட்டுப்படுத்த இன்ஹிபிட்டர்கள் கொள்கலனிற்கு செலுத்தப்பட்டது. இந்த இன்ஹிபிட்டர்கள் விஷவாயுவை சாதாரண வாயுவாக மாற்றும் தன்மை கொண்டது. இந்த சாதாரண வாயுவை நுகர்வதால் யாருக்கு எந்த தொல்லையும் ஏற்பட வாய்ப்பில்லை. வாயு கசிவை சரி செய்ய நிபுணர்கள் குழு முயன்று வருகிறது. மாலை 4 மணிக்குள் வாயு கசிவு கட்டுப்படுத்தப்படும். இது யாரும் அறியாமல் நிகழ்ந்த நிகழ்வு. பல நாள்கள் தொழிற்சாலை மூடப்பட்டு இருந்ததால் இந்த விஷவாயு கசிவு நடைபெற்றுள்ளது என்றார். 

இரண்டாம் முறை கசிவு

எல்.ஜி. தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவை சரிசெய்யும் முயற்சியில் தொழிற்சாலை நிபுணர்கள் ஈடுபட்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மீண்டும் விஷவாயு கசியத் தொடங்கியது. இதைக் கண்டவுடன் ஊழியர்கள் அனைவரும் பயத்துடன் ஓடினர். பின்னர் இன்ஹிபிட்டர்கள் செலுத்தி விஷவாயு கசிவைக் கட்டுப்படுத்தினர். ஆயினும் வெளியில் வந்த விஷவாயு மேலும் தாக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பராமரிப்பு இல்லாமை

பல நாள்கள் இத்தொழிற்சாலை பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டு இருந்து மீண்டும் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. தொழிற்சாலை திறக்கப்பட்டவுடன் முன்னெச்சரிக்கையாக அதைப் பராமரித்து தயாரிப்பை தொடங்கியிருந்தால் இதுபோன்ற அபாயகரமான விளைவுகளை தவிர்த்து இருக்கலாம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போபால் நிகழ்வும் இதுவும் ஒன்றல்ல - அமைச்சர்

விசாகப்பட்டினத்தில் நடந்த விஷவாயு கசிவு குறித்து ஆந்திர அமைச்சர் கெளதம் ரெட்டி கூறியதாவது:

கிராமத்திற்கு அருகில் தொழிற்சாலை இருந்ததால் இந்த விஷவாயு கசிவு காரணமாக மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் இதுபோல் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் உள்ள தொழிற்சாலை ஊருக்கு பல கி.மீ தொலைவில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கும்போது இந்த விஷயம் கவனத்தில் கொள்ளப்படும். போபால் நிகழ்வும் இதுவும் ஒன்றல்ல. போபால் விஷவாயு கசிவுடன் இதை ஒப்பிட வேண்டாம் என்று அவர் கூறினார்.

வாயு கசிவின் தாக்கம்

இந்த விஷவாயுவை நுகர்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷவாயு வெளியில் வந்தவுடன் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சிவிடும். ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் விஷவாயுவை உட்கொள்ளும் போது 10 நிமிடத்திற்குள் உள்ளுறுப்புகள் தங்கள் செயல்பாட்டை இழக்க நேரிடும். இதனால் மக்கள் உடனே மயக்கமடைந்து ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறக்க நேரிடுகிறது. இந்த வாயுவை சுவாசித்த மக்கள் குணமடைந்தாலும் இந்த வாயுவின் தாக்கம் அவர்களுக்கு கேன்சர் போன்ற பெரிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பு நடவடிக்கை

இந்த விஷவாயுவை சுவாசிக்க நேரிடும் போது,  உடனடியாக மூக்கு, வாய் உள்ளிட்ட அனைத்து சுவாச உறுப்புகளை துணியால் மூட வேண்டும். அடிக்கடி தண்ணீர் உட்கொள்ள வேண்டும். கண், மூக்கு, வாய் உள்ளிட்டவற்றை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். முகத்தில் ஈரத் துணியால் முகக் கவசம் அணிய வேண்டும். இவ்வாறு செய்வதால் விஷ வாயுவின் தாக்கம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

விசாரணை வேண்டும்

இந்த விஷவாயு பரவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சிவெல் நிறுவனம் தேசிய ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கி வரும் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு

விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார குழுவினருடன் கலந்தாலோசித்தார்.

அதற்குப் பின் அவர் கூறியதாவது:

விசாகப்பட்டினத்தில் நடந்த சம்பவம் மிகவும் மனவருத்தத்தை தருகிறது. தற்போது விஷவாயு பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற மல்டிநேஷனல் நிறுவனத்தில் சம்பவம் நடந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயு கசிவு ஏற்படும் போது அலாரம் ஒலி எழுப்பாதது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம், 2 முதல் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், முதற்கட்ட சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கும் நஷ்டஈடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதறகட்டமாக முதன்மை அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எல்.ஜி. பாலிமர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் வலியுறுத்தப்பட உள்ளது" என்று அவர் கூறினார்.

தலைவர்கள் வருத்தம்

விஷவாயு விபத்துக்கு பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து இந்த சம்பவம் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com