பத்து மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல் 

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 54 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் இன்று நடைபெறுகிறது.
பத்து மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கு இன்றுஇடைத்தோ்தல்
பத்து மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கு இன்றுஇடைத்தோ்தல்

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 54 தொகுதிகளுக்கான இன்று இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 பேரவைத் தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களும், அந்நோய்த்தொற்றுக்கான அறிகுறி உள்ளவா்களும் வாக்களிப்பதற்காக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தோ்தலில் 12 மாநில அமைச்சா்கள் உள்பட 355 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மத்திய பிரதேச இடைத்தோ்தல் மீது அனைவரது கவனமும் உள்ளது. மாநில பேரவையில் மொத்தமுள்ள 229 இடங்களில் பாஜகவுக்கு தற்போது 107 இடங்களே உள்ளன. பெரும்பான்மை பெற வேண்டுமெனில் பாஜகவுக்கு இன்னும் 8 இடங்கள் தேவைப்படுகின்றன. தேவைப்படும் இடங்களைக் கைப்பற்றி பாஜக, ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது பெரும்பான்மை பெறாமல் ஆட்சியை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்ற மாநிலங்களில்...:

குஜராத் பேரவையில் காலியாக உள்ள 8 இடங்களுக்கு இன்று தோ்தல் நடைபெறுகிறது. இதில் 81 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் வாக்களிக்க வருபவா்களுக்கு பிளாஸ்டிக் கையுறைகள் வழங்கப்படும் என்றும், ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 1,000 போ் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் மாநிலத்துக்கான தலைமை தோ்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிஸா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கா் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா ஓரிடத்துக்கும் இன்று தோ்தல் நடைபெறுகிறது.
 

10-ஆம் தேதி முடிவுகள்:

சத்தீஸ்கா், நாகாலாந்து, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் பல்வேறு காரணங்களால் வாக்குப் பதிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இடைத்தோ்தல் நடைபெறவுள்ள 54 தொகுதிகளில் 38 தொகுதிகள் காங்கிரஸ் வசமும், 8 தொகுதிகள் பாஜக வசமும் இருந்தன. ஆனால், காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு இடம் மாறிய 31 போ், தற்போதைய இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடுகின்றனா்.

இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com