சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது

​மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்துவிட்டனர்.

News image

தில்லி எல்லைப் பகுதியான சிங்குவில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :30 நவம்பர் 2020, 2:51 am

நிபந்தனையுடன் பேச்சுக்கு மறுப்பு; 5 எல்லைகளில் முற்றுகை
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்துவிட்டனர். இதனால் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தில்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.
மூன்று புதிய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தில்லியின் ஐந்து எல்லைகளும் திங்கள்கிழமை முதல் முற்றுகையிட்டு முடக்கப்படும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் தலைநகர் தில்லியின் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
"விவசாயிகள் புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அதற்கு முன்வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னதாக சனிக்கிழமை தெரிவித்திருந்தார். ஆனால், அவரின் நிபந்தனையை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துவிட்டனர்.
புதிய நிபந்தனை: புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக மனதின் குரலில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய பிறகு, விவசாய சங்க நிர்வாகிகள் தில்லி எல்லையில் ஒன்றுகூடி ஆலோசித்து புதிய நிபந்தனைகளை அறிவித்தனர்.
பாரதிய விவசாய சங்கத்தின் கிரந்திகாரி பிரிவின் தலைவர் சுர்ஜீத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளிடமிருந்து விளைப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் விகிதத்தையும், குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
மின்சாரம் தொடர்பான ஆணையை நிறுத்த வேண்டும். பயிர்க் கழிவுகள் எரிப்புக்காக அபராதம் விதிக்கப்படக் கூடாது.
புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்துக்குச் செல்லமாட்டோம். திறந்தவெளியில் எங்களைச் சிறை வைக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. அதற்கு ஒருபோதும் இடம் தரமாட்டோம். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்' என்றார்.
என்ன செய்ய வேண்டும்?: விவசாயிகள் சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், "மத்திய அரசு திறந்த மனதுடன் எங்களை அணுக வேண்டுமே தவிர நிபந்தனைகளை விதிப்பது சரியல்ல. பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு வேளாண் சட்டங்களின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. எங்களுக்கான திட்டம் என்ன என்பதை மத்திய அரசு தெரிவிக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும்' என்றார்.
பலத்த பாதுகாப்பு: இதனிடையே தில்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள டிக்ரியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை நான்காவது நாளாக அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தால் தில்லி வெளிவட்ட சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். ஆனாலும் விவசாயிகள் கலைந்து செல்லவில்லை. சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் அமைதியான முறையில் நீடித்தது.
எதிர்ப்பு ஏன்?: "புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனுள்ளது. அவர்கள் தங்கள் விளைபொருள்களைத் தரகர்கள் இல்லாமல் சந்தையில் யாருக்கு வேண்டுமானாலும் விற்க வழி செய்கிறது' என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், "புதிய சட்டத்தின் மூலம் பழைய நடைமுறை படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிடும். குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய்க்கு வழிசெய்கிறது. புதிய சட்டங்களால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அது பெருநிறுவனங்களுக்கே உதவிகரமாக இருக்கும்' என்கின்றனர் விவசாயிகள்.
பிரதமருக்குக் கோரிக்கை: விவசாயிகள் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு பிரதமர் மோடியை உலக பஞ்சாபிகள் சங்கத் தலைவர் விகம்ரம்ஜித் சஹானி கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டர் கூறியுள்ளதற்கு அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை
விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. கூட்டம் குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் கலந்துள்ளதாக தான் கூறவில்லை என்று அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.