கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கில் நியாயம் கிடைக்க உதவிய ஒரு திருடனின் வாக்குமூலம்

கேரளத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன
கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கில் நியாயம் கிடைக்க உதவிய ஒரு திருடனின் வாக்குமூலம்
கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கில் நியாயம் கிடைக்க உதவிய ஒரு திருடனின் வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரளத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.

பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ  செபி இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், அவா்களுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் புதன்கிழமை வெளியிட்டது.

அபாய கொலை வழக்கில் பலம்மிக்க குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாமல் பல முறை காவல்துறை தோல்வியைத் தழுவியது. ஆனால், நீதி நிச்சயம் வெல்லும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு திருடனின் வாக்குமூலம், கடவுளுக்கு சேவை செய்யும் இடத்தில் இருந்த குற்றவாளிகள் இருவரையும் நீதியின்முன் நிறுத்த உதவியது.

1992-ஆம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி நள்ளிரவில் அடக்கா ராஜு என்ற திருடன், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்தான். அங்கிருந்த சில காப்பர் பொருள்களை திருடுவது மட்டுமே அவனது நோக்கமாக இருந்தது. அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கட்டடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், நுழைய காத்திருந்த போது, பின்பக்க படிகட்டில் இரண்டு பேர் ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அதன்பிறகுதான், செய்தித்தாள்கள் வழியாக, இவ்விருவரும் ஒரு கன்னியாஸ்திரீ பெண்ணைக் கொலை செய்த குற்றவாளிகள் பாதிரியார் தாமஸ் கோட்டூர் என்பதும், அந்த கொலை நடந்த அன்றுதான் தான் அந்த பள்ளி வளாகத்துக்குள் திருடச் சென்றதும் தெரிய வந்தது.

உடனடியாக தான் அன்று பார்த்ததை காவல்துறையிடம் சொல்லி, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உதவினார். ஆனால், அதற்குள் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லும்படி, துன்புறுத்தல் முதல் கோடிக்கணக்கான பணம் வரை பேரம் பேசப்பட்டது.

ஆனால், எதற்கும் அசராத ராஜூ, தனது வாக்குமூலத்தை ஒவ்வொரு முறை நீதிமன்றப் படிகட்டுகளை ஏறும் போதும் ஒரு வார்த்தையும் மாறாமல் கூறினார். அவரது அந்த ஒற்றை வாக்குமூலம், பல வகைகளில் மறுக்கப்பட்ட நீதியை அபயாவுக்குப் பெற்றுக் கொடுத்தது.

செவ்வாய்க்கிழமை கோட்டூரும், செபியும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது.

அது பற்றி ராஜூ கூறுகையில், எனது குழந்தைக்கு நீதி கிடைத்துவிட்டது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் பல நாள்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று அவருக்கு நீதி கிடைத்துவிட்டது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று நான் நன்றாகக் குடித்துவிட்டு எனது மகிழ்ச்சியைக் கொண்டாடப்போகிறேன் என்று ஊடகங்களிடும் உற்சாகத்தோடு பேசினார் ராஜூ.

ராஜூவுக்கு இந்த வழக்குத் தொடங்கியது முதல் சில கோடிகள் வரை பேரம் பேசப்பட்டது. ஆனால் ஒற்றை ரூபாயைக் கூட வாங்கிக் கொள்ளாமல், தான் சொன்ன அந்த வாக்குமூலத்தை கடைசி வரை உண்மையாகவே வைத்திருந்ததால், தற்போது வெறும் மூன்று சென்ட் நிலத்தில் வாழ்ந்து வருகிறார் அந்த நல்ல திருடன்.

கேரளத்தைச் சோ்ந்த தாமஸ், லீலாம்மா தம்பதியின் மகள் அபயா (21). கன்னியாஸ்திரீயான இவா், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டில் தங்கி, அதே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்தாா். கடந்த 1992-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், கான்வென்ட் கிணற்றில் அவா் சடலமாகக் கிடந்தாா்.

இந்த வழக்கை முதலில் உள்ளூா் காவல்துறை விசாரித்திய நிலையில், பின்னா் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த சிபிஐ, பாதிரியாா்கள் தாமஸ் கோட்டூா், ஜோஸ் பூத்ருக்கயில், கன்னியாஸ்திரீ செபி ஆகிய மூவரையும் கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவா்களின் மூவரின் தகாத உறவு, அபயாவுக்குத் தெரியவந்ததால் அவரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதில் பாதிரியாா் பூத்ருக்கயில் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்ஹலாததால், அவா் முன்னதாகவே விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ‘பாதிரியாா் தாமஸ் கோட்டூா், கன்னியாஸ்திரீ செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள்’ என்று தீா்ப்பளித்தது. அவா்களுக்கான தண்டனை விவரம் புதன்கிழமை வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

அதன்படி, அவா்கள் இருவருக்குமான தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. சனல் குமாா் புதன்கிழமை வாசித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதம் விதித்தும், கன்னியாஸ்திரீ செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5.5 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், ஆதாரங்களை அழித்த குற்றத்துக்காக இருவருக்கும் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை அவா்கள் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com