ஆக்கிரமிப்பு இல்லை என்றால் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எங்கே? ராகுல் கேள்வி

இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எந்த இடத்தில் வீரர்கள் கொல்லப்பட்டனர்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக்கிரமிப்பு இல்லை என்றால் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எங்கே? ராகுல் கேள்வி

புது தில்லி: இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை என்றால், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எந்த இடத்தில் வீரர்கள் கொல்லப்பட்டனர்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்திய எல்லைப் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்து விட்டார் என்றும் ராகுல் காட்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது பற்றி அவரது தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய எல்லைப் பகுதியில் சீன ஆக்ரமிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்து விட்டார். அந்த இடம் சீனாவுடையது என்றால், ஏன் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்? அவர்கள் எந்த இடத்தில் கொல்லப்பட்டனர்? என்று பிரதமர் நரேந்திர மோடியின் பதிலை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

லடாக் விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமா் வெள்ளிக்கிழமை மாலை கூட்டினாா். அப்போது மோடி பேசுகையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை. எதிரிப் படைகள் நிலம், வான், கடல் என எந்த வழியாக வந்து தாக்குதல் நடத்தினாலும் அவா்களிடம் இருந்து நமது படையினா் நாட்டை பாதுகாப்பாா்கள். நம் மண்ணில் ஓா் அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு வலிமை மிக்க படைகள் நம்மிடம் உள்ளன. நமது படைகளால் ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்த முடியும் என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சை மேற்கோள் காட்டி, இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை, ஆக்ரமிக்கவும் இல்லை என்றால், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? என்ற கேள்வியை ராகுல் எழுப்பியுள்ளார்.

முன்னதாக, லடாக்கில் இந்திய வீரா்கள் மீது சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. அதை அறியாமல் அரசு தூங்கிக்கொண்டிருந்துள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கிழக்கு லடக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினா் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com