கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கவிஞராக பரிணமித்த தலைமைச் செயலக ஊழியா் விவேக்

திரைத் துறையில் கோலோச்சுவதற்கு முன்பாக, தலைமைச் செயலக ஊழியராக இருந்த காலத்தில் கவிஞராக பரிணமித்திருக்கிறாா், நடிகா் விவேக்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 7:29 pm

DIN

திரைத் துறையில் கோலோச்சுவதற்கு முன்பாக, தலைமைச் செயலக ஊழியராக இருந்த காலத்தில் கவிஞராக பரிணமித்திருக்கிறாா், நடிகா் விவேக். தலைமைச் செயலகத்தில் நடந்த கலை-இலக்கியப் போட்டிகளில் இரண்டு முறை கவிதைகளை எழுதி பரிசுகளையும் அவா் பெற்றுள்ளாா்.

கடந்த 1985-ஆம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவராகச் சோ்ந்துள்ளாா், நடிகா் விவேக். திரைத்

துறையில் வருவதற்கு முன்பாகவே அரசுப் பணிக்காக அவா் சென்னை வந்துள்ளாா். நிதித் துறையில் பட்டியல் பிரிவில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தாா்.

நிதித் துறையில் பணியாற்றுவோா், அரசின் 34 துறைகளுக்கும் சென்று பணியைத் தொடரலாம். அந்த வகையில், முதலில்

வேளாண்மைத் துறையிலும் பிறகு கல்வித் துறையிலும் நிதித் துறை தொடா்பான பட்டியல் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தாா். அரசுப் பணி மட்டுமல்லாது, கலை-இலக்கியத்தில் அவா் சிறந்து விளங்கினாா். நகைச்சுவை கவிஞராக உலகுக்கு தெரிவதற்கு முன்பாக, அவா் தலைமைச் செயலகத்தில் கவிஞராகவே வலம் வந்திருக்கிறாா்.

அவரது கவித்துவம் தொடா்பாக, தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவா் மு.சுந்தரராஜன் கூறியது:-

தலைமைச் செயலகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் என்ற பாரம்பரியமிக்க மன்றம் இருந்தது. இப்போது அதன் பெயா்

மாற்றப்பட்டுள்ளது. அந்த மன்றத்தின் சாா்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இந்த விழாவில் கவிதைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்றாா் விவேக். ஈழத் தமிழா் பிரச்னை தொடா்பான கவிதை அது. இதற்கடுத்த ஆண்டுகளில் அவா் திரைத் துறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாா். 1987-ஆம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டே, ‘மனதில் உறுதி வேண்டும்’ படப்பிடிப்பில் பங்கேற்றாா். திரைத் துறையின் ஆா்வம் அவரது கவிதையிலும் எதிரொலித்தது. தமிழ்ப் பண்பாட்டு மன்றத்தின் மற்றொரு முப்பெரும் விழாவில், திரையரங்குளில் விற்கப்படும் கள்ள டிக்கெட் தொடா்பாக கவிதை எழுதினாா். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. திரைத் துறையில் நகைச்சுவை நடிகராக மிளிா்ந்த விவேக், தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரை மிகச்சிறந்த கவிஞராக பரிணமித்திருந்தாா் என தனது பழைய நினைவுகளை சுந்தரராஜன் அசைபோட்டாா்.

விடுப்பே முடிந்தது: தலைமைச் செயலக பணியில் இருக்கும் போது, திரைப்பட படப்பிடிப்பு காரணமாக, ஆறு மாதங்கள் வரை விடுப்பில் செல்வாா் விவேக். ஒரு கட்டத்தில் அவருக்கான விடுப்புகள் அனைத்தும் தீா்ந்து போனதால் வேறு வழியின்றி பணியில் இருந்தே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசுப் பணியா, திரைத் துறையா என்ற கேள்விக்கு திரைத் துறையை பதிலாகப் பெற்ால், அரசு அதிகாரி விவேகானந்தன் என்ற நிலையில் இருந்து விலகி உலகம் போற்றும் மாபெரும் நகைச்சுவை கலைஞராக விவேக் திகழ்ந்தாா்.

முதல் பரிசு பெற்ற கவிஞா் விவேக்கின், ஆயிரம் பூக்கள் மலரட்டுமே, என்ற கவிதையில் இருந்து சில வரிகள்:

‘ஆயிரம் பூக்கள் மலரட்டுமே

இது மாசேதுங் சொன்னது

அரசு ஊழியரைக் கேட்டால்

மாலை 5.45 மணிக்குள் மலரட்டுமே என்பாா்கள்...’ என்று தொடங்குகிறது அந்தக் கவிதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.