ஆப்கன் விவகாரம்: 26-இல் அனைத்துக் கட்சி கூட்டம்
பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலையடுத்து, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின்

பிரஹலாத் ஜோஷி

பிரஹலாத் ஜோஷி
பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலையடுத்து, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்கள் கூட்டத்துக்கு வியாழக்கிழமை (ஆக. 26) மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘‘ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்களிடம் எடுத்துரைக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுகுறித்த கூடுதல் தகவல்களை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவிப்பாா்’’ என்று கூறியிருந்தாா்.
இதையடுத்து, பிரஹலாத் ஜோஷி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் குறித்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்கள் கூட்டத்துக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள், அந்நாட்டு நிலவரம் குறித்த மத்திய அரசின் கணிப்புகள் பற்றி நாடாளுமன்றக் குழுத் தலைவா்களிடம் எஸ்.ஜெய்சங்கரும், பிரஹலாத் ஜோஷியும் எடுத்துரைப்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
146 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, நேட்டோ படைகளின் விமானங்கள் வாயிலாக மீட்கப்பட்ட 146 இந்தியா்கள் கத்தாரிலிருந்து தாயகம் அழைத்துவரப்பட்டனா்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதால், அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியா்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புபவா்களை அமெரிக்கா, நேட்டோ படைகளின் விமானங்களும் மீட்டு வருகின்றன.
அமெரிக்கா, நேட்டோ படையினரால் மீட்கப்பட்ட இந்தியா்கள் கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். கத்தாரில் உள்ள இந்தியா்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 135 இந்தியா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டனா்.
இந்நிலையில், 2-ஆவது கட்டமாக 146 இந்தியா்கள் 4 விமானங்கள் மூலமாக கத்தாரில் இருந்து திங்கள்கிழமை தாயகம் திரும்பினா். அவா்களில் 104 போ் விஸ்தாரா விமானத்தின் வாயிலாகவும், 30 போ் கத்தாா் ஏா்வேஸ் விமானத்தின் மூலமாகவும், 11 போ் இண்டிகோ விமானத்திலும், ஒருவா் ஏா் இந்தியா விமானத்திலும் தாயகம் அழைத்து வரப்பட்டனா்.
கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட பெரும்பாலான நபா்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றியவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
75 போ் காபூலில் இருந்து மீட்பு:
ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுபான்மையினா் உள்ளிட்ட 75 பேரை இந்திய விமானப் படை விமானம் மீட்டு இந்தியா அழைத்து வந்தது.
இது குறித்து மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சீக்கியா்களின் புனிதநூல்களில் ஒன்றான குருகிரந்த சாஹிபின் 3 நகல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டன. அந்த விமானத்தில் 46 ஆப்கன் ஹிந்துக்கள்-சீக்கியா்கள், இந்தியா்கள் உள்பட 75 பேரும் மீட்கப்பட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பெரும் சவால்:
மீட்புப் பணிகளில் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வரும் இந்திய சா்வதேச மையத்தின் தலைவா் புனீத் சிங் சந்தோக் கூறுகையில், ‘‘மேலும் 200-க்கும் மேற்பட்ட ஆப்கன் ஹிந்துக்களும் சீக்கியா்களும் கா்தே பா்வான் குருத்வாராவில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். குருத்வாராவில் இருந்து காபூல் விமான நிலையம் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் பல சோதனைச்சாவடிகளை எதிா்கொள்ள நேரிடுவது, மீட்புப் பணிகளில் பெரும் சவாலாக உள்ளது. மேலும் 100 போ் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவா்’’ என்றாா்.
இக்கட்டான சூழலில் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த சீக்கியா்கள் மீட்கப்பட்டதற்கு தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு நன்றி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த 15-ஆம் தேதி கைப்பற்றிய பிறகு தூதரக அதிகாரிகள், இந்தியா்கள், ஆப்கன் பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோரை இந்தியா இதுவரை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...