/

இந்தியாவின் கரோனா தடுப்பூசி "ஹக்கோ19' : முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி

கரோனா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்ற, பாரம்பரிய முறையில் உருவான "ஹக்கோ19' (ஏஎஇஞ19) தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஏற்றுக் கொண்டுள்ளது. 

Updated On :24 ஆகஸ்ட் 2021, 11:04 pm

கரோனா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்ற, பாரம்பரிய முறையில் உருவான "ஹக்கோ19' (ஏஎஇஞ19) தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஏற்றுக் கொண்டுள்ளது.
 "ஹக்கோ19' பாதுகாப்பானது, செல்லத்தக்கது, தடுப்பூசி ஆய்வில் பங்கேற்றவர்கள் நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்து டிசிஜிஐ நிபுணர் குழு அனுமதியை வழங்கியுள்ளது.
 மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை தன்னுடைய உயிரி தொழில்நுட்ப தொழிலக ஆய்வு உதவி கவுன்சில் என்கிற லாப நோக்கமற்ற பொதுத் துறை நிறுவனத்தை அமைத்துள்ளது. இந்த நிறுவனம் கரோனா பாதுகாப்புக்கான இயக்கத்தில் புணேவை சேர்ந்த ஜென்னோவா பயோ ஃபார்மசூட்டிகல்ஸ் என்கிற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, தடுப்பூசி தயாரிப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. இதற்கு மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை நிதி உதவியும் அளித்தது.
 இந்த "ஹக்கோ19' தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளைவிட வேறுபட்டது. "எம்ஆர்என்ஏ' அடிப்படையில் இந்திய பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தூண்டும்விதமான தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆய்வை மேற்கொண்டு, முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்டிடி பயோ கார்ப்பரேஷன் நிறுவனமும் உதவ முன்வந்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு "ஹக்கோ19' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 இந்தத் தடுப்பூசிக்கான முதல்கட்ட ஆய்வை பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்ட மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தத் தடுப்பூசிக்கான இரண்டாம், மூன்றாம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
 இதுகுறித்து மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என டிசிஜிஐ அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரியதாகும். தடுப்பூசி மேம்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். நாட்டுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் இது ஒரு முக்கியமான தடுப்பூசியாக இருக்கும்' என தெரிவித்தார்.
 ஜென்னோவா பயோ ஃபார்மசூட்டிகல்ஸ் தலைமை நிர்வாகி சஞ்சய் சிங் கூறுகையில் "இரண்டாம் கட்ட ஆய்வு 15 இடங்களில் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட ஆய்வுகளுக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் இடங்களைப் பயன்படுத்தவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியைத் தொடங்கும்போது நாட்டின் தேவையான தடுப்பூசி உற்பத்திக்கு முழு அளவில் முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.