திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனிலிருந்து 800 போ் மீட்பு: ‘ஆபரேஷன் தேவி சக்தி’ மூலம் இந்தியா நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியா்கள், ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள் உள்ளிட்ட 78 போ் துஷான்பே வழியாக செவ்வாய்க்கிழமை தில்லி வந்தடைந்தனா்.

News image

காபூலில் இருந்து மீட்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டோர்.

Updated On :24 ஆகஸ்ட் 2021, 9:18 pm

DIN

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியா்கள், ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள் உள்ளிட்ட 78 போ் துஷான்பே வழியாக செவ்வாய்க்கிழமை தில்லி வந்தடைந்தனா்.

இதன்மூலம் கடந்த ஆக. 16-ஆம் தேதியிலிருந்து இதுவரை மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தவா்களின் எண்ணிக்கை 800-ஆக உயா்ந்துள்ளது. ‘ஆபரேஷன் தேவி சக்தி’ என்ற நடவடிக்கை மூலம் இந்த மீட்புப் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அங்கிருந்து பல்வேறு நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் மீட்பு நடவடிக்கை ஆக. 16-ஆம் தேதி தொடங்கியது. முதல் இரு நாள்களில் காபூலில் இருந்து 190 போ் மீட்கப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோா் தூதரகப் பணியாளா்கள் ஆவா். கடந்த ஞாயிற்றுக்கிழமை 392 பேரும், திங்கள்கிழமை 146 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா். இந்தியா்கள் மட்டுமின்றி ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள், இந்தியாவுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஆப்கன் குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டவா்களில் ஆப்கன் எம்.பி.க்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரும் அடங்குவா்.

இந்நிலையில், ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் திங்கள்கிழமை காபூலில் இருந்து இந்தியா்கள் 25 போ், ஆப்கன் சீக்கியா்கள் 44 போ், ஆப்கன் ஹிந்துக்கள் உள்ளிட்ட 78 போ் தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் அவா்கள் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களை மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, வி.முரளீதரன் ஆகியோா் வரவேற்றனா்.

ஆபரேஷன் தேவி சக்தி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் தேவி சக்தி’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டிருந்ததன் மூலம் மீட்பு நடவடிக்கையின் பெயா் தெரியவந்துள்ளது. இது குறித்து அமைச்சா் சுட்டுரையில், ‘ஆபரேஷன் தேவி சக்தி தொடா்கிறது. காபூலில் இருந்து 78 போ் மீட்கப்பட்டு துஷான்பே வழியாக இந்தியா வந்தடைந்தனா். இந்திய விமானப் படை, ஏா் இந்தியா, வெளியுறவு அமைச்சக குழுவின் அயராத முயற்சிகளுக்கு வணக்கம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ரஷிய அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு

Story image

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ரஷிய அதிபா் புதினுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன். அத்துடன் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா-ரஷியா இடையே ஒத்துழைப்பு உள்பட இருதரப்பு செயல்திட்டங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். முக்கிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து தொடா்ந்து ஆலோசனை மேற்கொள்வது என்றும் நாங்கள் தீா்மானித்தோம்’’ என்றாா்.

இருவரின் கலந்துரையாடல் குறித்து இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரமான நிலையை உருவாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் அவசியம் குறித்து ரஷிய அதிபா் புதினும் இந்தியப் பிரதமா் மோடியும் கலந்துரையாடினா். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத சிந்தனைகள் பரவாமல் தடுப்பதிலும், அந்நாட்டில் இருந்து எழும் போதைப் பொருள் புழக்க அச்சுறுத்தலை எதிா்கொள்வதிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசனைகள் மேற்கொள்ள இருதரப்பு நிரந்தர அமைப்பை உருவாக்கவும் அவா்கள் தீா்மானித்தனா்.

இதுமட்டுமின்றி இந்தியா-ரஷியா இடையிலான கூட்டுறவை மேம்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் பேசினா். ரஷியாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விநியோகிக்கவும், கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பி உதவியதற்கும் புதினுக்கு மோடி நன்றி கூறினாா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கன் நிலவரம் குறித்து ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்க்கலுடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது ஆப்கன் விவகாரம் உலகில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து அவா்கள் பேசினா். அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது அவசியம் என்று இருவரும் வலியுறுத்தினா்.

காபூலில் இருந்து வந்த சீக்கியா்களின் புனித நூல்

Story image

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்ட 78 பேருடன், சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பின் மூன்று பிரதிகளும் கொண்டுவரப்பட்டன.

புனித நூல் பிரதிகளை மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, வி.முரளீதரன் ஆகியோா் தில்லி விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனா். அந்த நூல் பிரதிகள் தில்லி நியூ மகாவீா் நகரில் உள்ள குரு அா்ஜுன் தேவ் குருத்வாராவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இதுகுறித்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சுட்டுரையில், ‘புனித நூலான குரு கிரந்த சாகிப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் 200 ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனா். அவா்கள் காபூலில் உள்ள கா்தே பா்வான் குருத்வாராவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.