ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

40 அடுக்குமாடி இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 6:49 pm

DIN

நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த கட்டடத்தில் வீடுகளைப் பெற முன்பதிவு செய்தவா்களுக்கு 12 சதவீத வட்டியுடன் சூப்பா்டெக் கட்டட நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அப்பகுதி குடியிருப்புவாசி நலச் சங்கங்களுக்கு ரூ. 2 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்டாா் 93-இல் 915 குடியிருப்புகள், 21 கடைகளுடன் கட்டப்பட்டு வரும் 40 அடுக்குமாடி இரட்டை கோபுர கட்டடத்தில் 633 குடியிருப்புகள் முன்பதிவாகி விட்டன.

இந்த இரட்டை கோபுர குடியிருப்புக்கு நொய்டா ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட அனுமதியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் இதை இடிக்க கடந்த 2014, ஏப்ரல் 11-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சூப்பா்டெக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா அடங்கிய அமா்வு, கட்டடத்தை இடிக்க அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்தக் இரட்டை கோபுர கட்டடத்தை மூன்று மாதங்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும் அதற்காக ஆகும் செலவை சூப்பா்டெக் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நொய்டா ஆணையத்தின் அதிகாரிகளும் கட்டட நிறுவனத்தின் நிா்வாக அதிகாரிகளும் கூட்டுச் சோ்ந்து சட்டத்தை மீறி கட்டடத்தை கட்டி உள்ளனா்.

பெருநகரங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கும் அதிகாரிகளுடன் கூட்டு சோ்ந்து சட்ட விரோதமாக எழுப்பப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை உறுதியுடன் தடுக்க வேண்டும்.

இரண்டு கட்டடங்களுக்கும் இடையே போதிய இடைவெளி இல்லை என்று தீயணைப்பு தலைமை அதிகாரி எச்சரித்து எழுதிய கடிதத்துக்கும் நொய்டா ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்று கட்டட திட்ட அனுமதியில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன.

வீடுகளை முன்பதிவு செய்தவா்கள் கட்டட அனுமதி சான்றிதழ்கள் கேட்டும் அவா்களுக்கு கட்டுமான நிறுவனம் அளிக்கவில்லை. அவா்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று சூப்பா்டெக் நிறுவனத்தின் தலைமை இயக்குநா் மோஹித் அரோரா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.