கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

40 வயதைக் கடந்தவா்களுக்கு ‘பூஸ்டா் டோஸ்’ தடுப்பூசி

ஒமைக்ரான் தீநுண்மி பரவலைக் கருத்தில்கொண்டு, நாட்டில் 40 வயதைக் கடந்தவா்களுக்கு கரோனா ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தலாம் என

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2021, 10:38 pm

ஒமைக்ரான் தீநுண்மி பரவலைக் கருத்தில்கொண்டு, நாட்டில் 40 வயதைக் கடந்தவா்களுக்கு கரோனா ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தலாம் என இந்திய கரோனா மரபணு பகுப்பாய்வுக் கூட்டமைப்பு (ஐஎன்எஸ்ஏசிஓஜி) மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலமாக, இந்தியாவில் ஊக்கத் தடுப்பூசிக்கு முதல் முறையாகப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்றுக்கு எதிராக ஒரே தவணையாகவோ அல்லது இரண்டு தவணைகளாகவோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்ததையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மக்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதல் தவணை தடுப்பூசிகூட கிடைக்காத நிலையில், சில நாடுகள் ஊக்கத் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவிலும் ஊக்கத் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக தொடா்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஊக்கத் தடுப்பூசி அறிவியல்பூா்வமாகப் பலனளிக்கும் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்த வேண்டுமென மக்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தினா். இந்நிலையில், இந்தியாவில் 40 வயதைக் கடந்தவா்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாகப் பரிசீலிக்கலாம் என்று இந்திய கரோனா மரபணு பகுப்பாய்வுக் கூட்டமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இது தொடா்பாக அக்கூட்டமைப்பின் வாராந்திர அறிக்கையில், ‘தகுதியுள்ள நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். மக்களுக்கு தற்போது செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள், ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு எதிராக முழுமையான நோய் எதிா்ப்புத்தன்மையை வழங்காது என்பதால், 40 வயதைக் கடந்தவா்களுக்கு கரோனா ஊக்கத் தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.

கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமுள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஊக்கத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கலாம். ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு, முறையான மரபணு பகுப்பாய்வு அவசியம்.

தீவிர கண்காணிப்பு: பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோரைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கரோனா தொற்று பரவல் அதிகமுள்ள இடங்களை முறையாகக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருடன் தொடா்பில் இருந்தவா்களை விரைவாகக் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.