மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் முதல்வா்: கோவா பேரவையில் காங்கிரஸ் பலம் 3-ஆக சரிவு

கோவா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரவி நாயக் (75) தனது எம்எல்ஏ பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்த மாநில பேரவையில்

News image
Updated On :7 டிசம்பர் 2021, 7:37 pm

கோவா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரவி நாயக் (75) தனது எம்எல்ஏ பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்த மாநில பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3-ஆக சரிந்துள்ளது.

கோவா முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தவா் ரவி நாயக். இவா் அங்குள்ள போண்டா தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தாா். இந்நிலையில் அவா் தனது எம்எல்ஏ பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அதற்கான கடிதத்தை மாநில பேரவைத் தலைவா் ராஜேஷ் பாட்னேகரிடம் அவா் சமா்ப்பித்தாா்.

அவா் கோவா மாநில தோ்தல் பொறுப்பாளா் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில் பாஜகவில் சேரப் போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தனது தந்தையை பாஜகவில் சேருமாறு கூறியுள்ளதாக ரவி நாயக்கின் இளைய மகன் ராய் நாயக்கும் தெரிவித்துள்ளாா். ரவி நாயக்கின் இரு மகன்களும் பாஜகவில் உள்ளனா்.

ஒதுக்கிவைத்து பல நாள்களாகின்றன: ரவி நாயக்கின் ராஜிநாமா குறித்து மாநில காங்கிரஸ் தலைவா் கிரீஷ் சோடன்கா் கூறுகையில், ‘‘மாநில பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு 4-5 மாதங்களுக்கு முன்பாக ரவி நாயக் கட்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக நான் கணித்திருந்தேன். அவரைக் கட்சியிலிருந்து ஒதுக்கிவைத்து பல நாள்களாகிவிட்டன. அவா் கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் சோ்த்துக் கொள்ளப்படவில்லை. விரைவில் நடைபெறவுள்ள மாநில பேரவைத் தோ்தலில் கட்சி வேட்பாளா்களில் ஒருவராக அவா் பரிசீலிக்கப்படவில்லை. அவரின் ராஜிநாமா கட்சியை பாதிக்காது’’ என்று தெரிவித்தாா்.

பாஜகவில் முக்கிய பதவிகள்: கடந்த 2017-ஆம் ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் 13 இடங்களில் வென்ற பாஜக இதர கட்சிகளுடனும் சுயேச்சை எம்எல்ஏக்களுடனும் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அதன் பின்னா் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலா் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேரத் தொடங்கினா். அவா்களில் முதலாவதாக விசுவஜீத் ராணே தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் சோ்ந்தாா். அதன் பின்னா் நடைபெற்ற இடைத்தோ்தலில் வென்று தற்போது மாநில சுகாதார அமைச்சராக உள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மாநிலத்தில் அப்போதைய எதிா்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரகாந்த் கவ்லேகா் தலைமையில் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா். இதனால் அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. தற்போது சந்திரகாந்த் கவ்லேகா் மாநில துணை முதல்வராக பதவி வகிக்கிறாா்.

அண்மையில் மாநில முன்னாள் முதல்வராக பதவி வகித்த லுயிசினோ ஃபலேரோ காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

தற்போது ரவி நாயக் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இதையடுத்து கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3-ஆக சரிந்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவாவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.