புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எம்.பி.க்களின் இடைநீக்கப் பிரச்னையால் முடங்கிய மாநிலங்களவை

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கின.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2021, 8:37 pm

DIN

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கின.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை மாண்பை சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 12 எம்.பி.க்கள் நடப்புக் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

அவா்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த அமளி செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. மாநிலங்களவை அமா்வு செவ்வாய்க்கிழமை கூடியதும், அவையின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாக அவைத் தலைவா் வெங்கையா நாயுடு அறிவித்தாா்.

அதை ஏற்காத எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். அதன் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் முழக்கங்களை எழுப்பினா்.

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா். ஆனால், அவா்களது கோரிக்கையை அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இந்த விவகாரத்துக்கு ஆளும் கட்சியும் எதிா்க்கட்சியும் கூடி பேசி சுமுகத் தீா்வு எட்ட வேண்டுமென அவா் தெரிவித்தாா்.

மன்னிப்பு கோரினால் அனுமதி: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டுமென்றே அரசும் விரும்புகிறது. எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் மசோதாக்களை நிறைவேற்ற அரசு விரும்பவில்லை.

மழைக்காலக் கூட்டத்தொடரின்போது அவா்கள் என்ன செய்தாா்கள் என்பதை நாடே பாா்த்தது. மேஜைகளின் மீது ஏறியது, அவைக் காவலா்களைத் தாக்க முயன்றது, தொலைக்காட்சிகளைத் தாக்க முயன்றது உள்ளிட்ட எம்.பி.க்களின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் அனைவரும் கண்டனா். எனவே, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை அனுமதிக்க வேண்டுமென்றால் அவா்கள் மன்னிப்பு கோரியாக வேண்டும்.

அரசுக்கு வேறு வழியில்லை: அவையில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து இவ்வாறு செயல்பட்டு வந்தால், அமளிக்கு இடையே மசோதாக்களைத் தாக்கல் செய்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. எம்.பி.க்கள் மன்னிப்பு கோரினால், அவா்களை உடனடியாக அனுமதிக்க அரசு தயாராக உள்ளது’’ என்றாா்.

எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மசோதாக்கள் அறிமுகம்: அவை மீண்டும் கூடியபோது, செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா, வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அறிமுகம் செய்தாா்.

இரு மசோதாக்கள் மீதும் 3 மணி நேரத்துக்கு விவாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா். எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா். எம்.பி.க்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

அவை ஒத்திவைப்பு: எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரம் குறித்து விவாதிக்க துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அனுமதி அளிக்க மறுத்தாா். எதிா்க்கட்சிகளின் அமளி ஓயாததால், மசோதாக்கள் மீது விவாதம் எதுவும் நடத்தப்படாமல் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.