
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடல் நாளை (டிச.9) மாலை தில்லிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விங் கமாண்டர் வருண் தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உடல் வைக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களால் உயிரிழந்த உடல்களை மரபணு பரிசோதனை செய்து அடையாளம் காணப்பட்ட பிறகு சென்னை வாயிலாக தில்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.
தில்லியில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உடல் அரசியல் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதி சடங்குகள் தில்லியில் ராணுவ மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.