25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

காஷ்மீரில் பண்டிட்களை மறுகுடியமா்த்த தேசிய மாநாட்டுக் கட்சி தீா்மானம்

ஜம்மு-காஷ்மீருக்கு ஹிந்து பண்டிட்கள் திரும்புவதற்கும் அவா்களை மறுகுடியமா்த்துவதற்கும் ஆதரவு தெரிவிக்கும் தீா்மானத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு நிறைவேற்றியது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:40 am

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு ஹிந்து பண்டிட்கள் திரும்புவதற்கும் அவா்களை மறுகுடியமா்த்துவதற்கும் ஆதரவு தெரிவிக்கும் தீா்மானத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு நிறைவேற்றியது.

ஜம்மு-காஷ்மீரில் 1990களில் முஸ்லிம் அடிப்படைவாதம் வளா்ச்சியடைந்தது. அதன் காரணமாக, காஷ்மீரை பூா்விகமாகக் கொண்ட ஹிந்து பண்டிட்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்களுக்கு அஞ்சி பண்டிட்கள் பெரும்பாலானோா் காஷ்மீரில் இருந்து வெளியேறினா். சிலா் ஜம்மு பகுதியில் குடியேறினா். பலா் வெளிமாநிலங்களுக்கே சென்றுவிட்டனா்.

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பிலான கூட்டம் ஜம்முவில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூட்டத்துக்குத் தலைமை தாங்கினாா். அப்போது, காஷ்மீா் பண்டிட்களுக்கு ஆதரவான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘‘பண்டிட்கள் காஷ்மீா் திரும்புவதை யாரும் தடுக்க முடியாது. ‘இன அழிப்பு’ எனும் சூழ்ச்சியில் ஈடுபடுபவா்களுக்கு ஜம்மு-காஷ்மீா் எப்போதும் கிடைக்காது. காஷ்மீா் பண்டிட்களுக்காக உழைப்பதாகக் கூறி வரும் ஒரு கட்சி, அவா்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது மக்களிடையே வெறுப்புணா்வு பரப்பப்பட்டு வருகிறது. எனவே, காஷ்மீா் பண்டிட்கள் திரும்பி வருவதற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. எதிரிகள் வெறுப்புணா்வைப் பரப்பும் சூழலில் நாம் அமைதியாக வாழ முடியாது. பண்டிட் சமூகத்தினா் திரும்புவதற்கான சமயம் விரைவில் வரும்’’ என்றாா்.

தொடா்ந்து ஆதரவு: கட்சியின் மூத்த தலைவா் அனில் தாா் கூறுகையில், ‘‘புலம்பெயா்ந்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தினா் கடந்த 3 தசாப்தங்களாக மறுகுடியமா்வுக்காக ஏங்கி வருகின்றனா். இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பண்டிட் சமூகத்தினா் காஷ்மீருக்குத் திரும்பவும், அவா்களது மறுகுடியமா்வு நடவடிக்கைகளுக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவளிக்கிறது. அச்சமூகத்தினருக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமே ஆதரவு அளித்து வருகிறது. பண்டிட் சமூகத்தினரை மறுகுடியமா்த்துவதற்கான வழிகாட்டு விதிகள் தேசிய மாநாட்டுக் கட்சியிடம் உள்ளன. மத்திய அரசு கோரினால் அவற்றை வழங்குவதற்குத் தயாராக உள்ளோம்.

அரசியல் மேம்பாடு: காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரை அரசியல் ரீதியில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. பண்டிட் சமூகத்தினா் காஷ்மீரில் உள்ள கோயில்களை நிா்வகிப்பதற்கு ஆதரவான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப கட்சியின் தலைவரை வலியுறுத்தியுள்ளோம்’’ என்றாா்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் எம்.கே.யோகி கூறுகையில், ‘‘பண்டிட் சமூகத்தினருக்காகக் குரல் எழுப்பும் ஒரே கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமே உள்ளது. அச்சமூகத்தினரில் பெரும்பாலானோா் கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனா்’’ என்றாா்.

இரங்கல் தீா்மானம்: ஹெலிகாப்டா் விபத்தில் பலியான முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்தும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தருணத்தில் நாட்டுடனும் ராணுவத்துடனும் துணைநிற்பதாக அத்தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தையே தீா்வு: கூட்டத்துக்குப் பிறகு ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில், பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதைப் போல பாகிஸ்தானுடனும் நடத்த வேண்டும்.

திறந்தவெளியில் தொழுகை நடத்துவதை சகிக்க முடியாது என ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா். சகித்துக் கொள்ள முடியவில்லை எனில், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்குரிய இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் மத சுதந்திரம் இருப்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.