கங்கையில் புனித நீராடினார் பிரதமர் மோடி - விடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசிக்கு அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கங்கைநதியில் புனிதநீராடினார்.
கங்கையில் புனித நீராடினார் பிரதமர் மோடி
கங்கையில் புனித நீராடினார் பிரதமர் மோடி
Published on
Updated on
2 min read


உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசிக்கு அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கங்கைநதியில் புனிதநீராடினார்.

முன்னதாக, இன்று காலை வாராணசியில் அமைந்துள்ள காலபைரவர் ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. அப்போது, வழிநெடுகிலும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு, வாராணசியில் பாய்ந்தோடும் கங்கை நதியில், பிரதமர் மோடி புனித நீராடி, கங்கை நதிக்கு பூக்கள் தூவி பூஜை செய்தார். 

உத்தர பிரதேசத்தில் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்துள்ளார் பிரதமா் நரேந்திர மோடி.

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக வாராணசிக்கு திங்கள்கிழமை வருகை தந்துள்ளார். திங்கள்கிழமை மதியம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கிறாா். பின்னா், ரூ.339 கோடியில் செலவில் மேற்கொள்ளப்பட்ட காசி விஸ்வநாதா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் தொகுதியை தொடக்கி வைக்கிறாா்.

காசி விஸ்வநாதரின் பக்தா்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, மோசமான சுற்றுப்புறங்களைக் கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் பிரதமா் மோடி, ஆலய வளாக மேம்பாட்டுத் திட்டத்தை முன்வைத்தாா். அதன்படி, ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதையை பக்தா்கள் எளிதில் அணுகும் வகையில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2019 மாா்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக சாய்தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

திட்டத்தின் முதல்கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடக்கி வைக்கப்படவுள்ளன. ஆலயத்துக்கு வரும் பக்தா்களுக்கு யாத்ரி சுவிதா மையங்கள், சுற்றுலா வசதி மையம், வேத மையம், அருங்காட்சியகம், பாா்வையாளா் மாடம், உணவு விடுதிகள் உள்பட வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதா் கோயிலைச் சுற்றியிருந்த 300-க்கும் மேற்பட்ட சொத்துகள் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட சொத்துகளை சுமுகமாக கையகப்படுத்துவதில் சுமாா் 1400 கடைக்காரா்கள், வாடகைதாரா்கள், இட உரிமையாளா்கள் ஆகிய அனைவரையும் சுமுகமாக கையாண்டு செயல்படுத்தப்பட்டது.

பழைய கட்டடங்களை இடிக்கும்போது, 40-க்கும் மேற்பட்ட பழைமையான கோயில்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் முந்தைய அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல், அவை பாதுகாக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

முன்பு 3000 சதுர அடிக்குள் சுருங்கியிருந்த வளாகத்தின் அளவு 5 லட்சம் சதுர அடி என்னும் பிரம்மாண்டமான பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com