நானும் பிராமணர்தான்; பாஜகவிடமிருந்து நற்சான்றிதழ்கள் தேவையில்லை: மம்தா

"நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் ஒரு பிராமணர். எனக்கு பாஜகவிடம் இருந்து ஒன்றும் நற்சான்றிதழ்கள் தேவையில்லை"
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கவிட்டுள்ளன. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக மம்தா பானர்ஜி அங்கு சென்றுள்ளார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

அப்போது, "கோவாவில் பாஜகவை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காகப் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நான் உங்களை எதிர்க்க வரவில்லை, வெளியாட்கள் யாரும் கோவாவைக் கட்டுப்படுத்துவதை நான் விரும்பவில்லை.

நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் ஒரு பிராமணர். எனக்கு பாஜகவிடம் இருந்து ஒன்றும் நற்சான்றிதழ்கள் தேவையில்லை" என்றார்.

அதேபோல மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் மம்தா பானர்ஜி இந்து பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முன்னதாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மம்தா பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். 

தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உள்ள மம்தாவின் செல்வாக்கை அது மேலும் உயர்த்தியது. அடுத்தகட்டமாக 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

அதேநேரம், கடந்த சில மாதங்களாக, மம்தா காங்கிரஸ் கட்சியை சாடிவருகிறார். சமீபத்தில் கூட, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை எனக் கூறினார். அதேநேரம் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் இல்லாமல் தேசியளவில் எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைக்க முடியாது என பதில் அளித்திருந்தார்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகத் தாக்கி பேசிய மம்தா, "ஒரு கட்சி பாஜகவைத் தோற்கடிக்க எதுவும் செய்யவில்லை என்பதற்காக மற்ற கட்சிகளும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நினைப்பது சரியல்ல. யாராவது பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com