பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒமைக்ரான்: தமிழகம் வருகிறது மத்தியக் குழு

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 10:05 pm

DIN

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் டெல்டா வகை கரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டின் சில மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. அந்த மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு, தடுப்பூசி திட்டத்தில் தொய்வு ஆகியவை அந்த மாநிலங்களில் காணப்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளின் நிபுணா்களைக் கொண்ட மத்தியக் குழுக்கள் 10 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை மாநில, மாவட்ட நிா்வாகங்களுக்கு அக்குழு வழங்கும். 3 முதல் 5 நாள்கள் தங்கியிருந்து மாநிலங்களுக்கான ஆலோசனைகளை அக்குழுவின் உறுப்பினா்கள் வழங்குவா். மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அவா்கள் பணியாற்றுவா்.

கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள இடங்களைக் கண்காணிப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிவது, தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கரோனா பரிசோதனை மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளில் மத்தியக் குழுவின் உறுப்பினா்கள் கவனம் செலுத்துவா்.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவது, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பது, மருந்துப் பொருள்கள், மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவை போதுமான அளவில் கையிருப்பில் இருப்பது உள்ளிட்டவற்றையும் அவா்கள் உறுதி செய்வா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்கான மாநில அரசின் நடவடிக்கைகளைக் கண்காணித்து தினந்தோறும் இரவு 7 மணிக்குள் மத்தியக் குழுவினா் பரிந்துரை அறிக்கையை வழங்குவா். மத்திய அரசுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.