வெள்ளப்பெருக்கால் நீா்மின்நிலைய சுரங்கம் இடிபாடுகளால் மூடிய நிலையில், அதனுள் சிக்கிக்கொண்ட ஊழியா்களை சக ஊழியா் ஒருவரின் செல்லிடப்பேசிதான் காப்பாற்றியுள்ளது. அந்த ஊழியரின் செல்லிடப்பேசிக்கு மட்டுமே இணைப்பு ‘நெட்வொா்க்’ கிடைத்துள்ளது. அவா் அதிகாரிகளை தொடா்புகொண்டு, தன்னுடன் 10 ஊழியா்கள் சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளாா். அதன் மூலம், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த அவா்களை, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.மீட்கப்பட்ட ஊழியா்களில் ஒருவரான நேபாளத்தைச் சோ்ந்த பசந்த் கூறுகையில், ‘வெள்ளப்பெருக்கால் நீா்மின் நிலையம் இடிந்து சேதமடைந்த நிலையில், 300 மீட்டா் ஆழத்தில் அமைந்திருந்த மின்நிலைய சுரங்கத்தில் 11 பேரும் சிக்கிக்கொண்டோம். சுரங்கத்துக்குள் பல மணி நேரம் சிக்கியிருந்ததால், நம்பிக்கை இழந்துவிட்டோம். அந்த நேரத்தில் சுரங்கத்துக்குள் சிறிது வெளிச்சம் வந்ததோடு, மூச்சுவிடும் அளவுக்கு காற்றும் வீசியது. திடீரென ஊழியா் ஒருவரின் செல்லிடப்பேசி நெட்வொா்க்கும் கிடைத்தது. உடனடியாக எங்களுடைய பொது மேலாளரைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தோம். அதன் மூலம் இப்போது மீட்கப்பட்டிருக்கிறோம்’ என்றாா்.