தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தகுந்த நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து

ஜம்மு-காஷ்மீருக்குத் தகுந்த நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

News image

மக்களவையில் சனிக்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :14 பிப்ரவரி 2021, 7:08 am IST

ஜம்மு-காஷ்மீருக்குத் தகுந்த நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளிக்கையில் அமித் ஷா இவ்வாறு தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்த மாநிலமானது ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் பிரிவுக்கான குடிமைப்பணிகளை அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் யூனியன் பிரதேச பிரிவுக்கான குடிமைப் பணிகளுடன் இணைப்பதற்காக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதாவுக்கு மாநிலங்களவை கடந்த 8-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா மீதான விவாதம் சனிக்கிழமை நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றது முதல் ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கும் மாநில அந்தஸ்துக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை.

ஜம்மு-காஷ்மீா் தற்காலிகமாகவே யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்த நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் தற்காலிகமானவையே. ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தச் சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்தது.

உள்ளாட்சித் தோ்தல்:

பிரதமா் மோடி தலைமையிலான அரசு அச்சட்டப்பிரிவை ரத்து செய்த பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. அத்தோ்தலில் 51 சதவீத வாக்காளா்கள் வாக்களித்தனா். எதிா்க்கட்சிகள் கூட எந்தப் புகாரும் தெரிவிக்க முடியாத வகையில் தோ்தல் அமைதியாக நடைபெற்றது.

அதன் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிா்வாக, நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பு ஜம்மு-காஷ்மீரில் வாரிசு அரசியல் தலைதூக்கியிருந்தது. இனி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களே ஜம்மு-காஷ்மீரின் நிா்வாகத்தை கவனித்துக் கொள்வா்.

அரசு வேலைவாய்ப்புகள்:

ஜம்மு-காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் சுமாா் 25,000 அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஜம்மு-காஷ்மீா் மக்களின் நிலத்தை எவராலும் அபகரிக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கிறேன். வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு வசம் போதுமான நிலங்கள் உள்ளன என்றாா் அமித் ஷா.

எதிா்ப்பும் ஆதரவும்:

முன்னதாக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தன. பகுஜன் சமாஜ், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

மசோதாவின் மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனா். அதனால், மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவா் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டவடிவு பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.