11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி விடுவிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அப்பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 10:08 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அப்பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பணியாற்றி வந்த கிரண் பேடி, அந்தப் பதவியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார். அவர் பதவியேற்றுக் கொள்ளும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 மே 28-இல் கிரண் பேடி பொறுப்பேற்றார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக அவர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் பேட்டி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் வே.நாராயணசாமி கூறியது:
கிரண் பேடி புதுவை மாநிலத்துக்கு 2016-இல் வந்தபோது விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட்டார். அதன்பின்னர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், புதுவையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தடையாக இருந்து வந்தார். இது சம்பந்தமாக நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கிரண் பேடியை சந்தித்துப் பேசியும், அவர் உதாசீனப்படுத்தினார். இந்த பிரச்னை பூதாகரமாகி பேரவையிலும் எழுப்பப்பட்டது.
மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்கள் அனைத்தையும் கிரண் பேடி தடுத்து நிறுத்தினார். கோப்புகளை திருப்பி அனுப்பினார். இதை மத்திய பாஜக அரசு ஊக்குவித்தது. தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமைச் செயலகமாக செயல்பட்டது. பாஜக சொல்வதைத்தான் கிரண் பேடி செய்து வந்தார்.
அவரது இந்தச் செயல்களை எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியினர் பலகட்டப் போராட்டங்களை நடத்தினோம். அதன் விளைவாக, எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது என்பதை உணர்ந்து, பிரதமர் மோடி அரசானது கிரண் பேடியை துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து தற்போது நீக்கியுள்ளது.
இதனால், புதுவை மாநிலத்தின் உரிமைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. புதுவை மாநில மக்களின் உரிமைகளைப் பறிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். இது எங்களுடைய மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி. புதுவை மாநில மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றார் முதல்வர் வே.நாராயணசாமி.
பேட்டியின்போது, மாநில காங்கிரஸ் தலைவர் எ.வி.சுப்பிரமணியன், தேசிய செயலர் சஞ்சய் தத், வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பைதெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சம பலத்தில் ஆளும் கூட்டணி - எதிர்க்கட்சிகள்
காங்கிரஸுக்கு10 எம்.எல்.ஏ.க்கள், திமுகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள், மாஹே தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பேராசிரியர் ராமச்சந்திரன் என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு உள்ளது. என்.ஆர்.காங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏ.க்கள், அதிமுகவுக்கு 4 பேர், பாஜகவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆளுங்கட்சிக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தற்போது புதுவை சட்டப்பேரவையில் சம பலத்தில் உள்ளன. இதனால் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம், காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம் என்றார்.

மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜிநாமா
புதுவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் செவ்வாய்க்கிழமை திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.