குஜராத், உ.பி.யில் காகங்கள் உயிரிழப்பு: ஆய்வகப் பரிசோதனைக்கு ஏற்பாடு

Updated on
1 min read


ஆமதாபாத்: நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவுதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள சூழலில், குஜராத், உத்தர பிரதேச மாநிலங்களில் இறந்த நிலையில் காகங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளன.

ஜராத் மாநிலம், மேஹசனா மாவட்டத்தில் 4 காகங்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அங்குள்ள மொதேரா கிராமத்தில் உள்ள சூரியனாா் கோயில் வளாகத்தில் இந்த காகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கால்நடை பரிமாரிப்புத் துறை அலுவலரும் மருத்துவருமான பாரத் தேசாய் வியாழக்கிழமை கூறியதாவது:

காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியிருந்தால் ஒரே நேரத்தில் ஏராளமான பறவைகள் இறந்திருக்கும். ஆனால், 4 காகங்கள் மட்டுமே உயிரிழந்துள்ளன. பறவைக் காய்ச்சலால் இவை உயிரிழந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், காகங்களின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு இறந்த காகங்களின் உடல்களை அனுப்பி வைத்துள்ளோம் என்றாா் அவா்.

இரு தினங்களுக்கு முன் ஜுனாகட் மாவட்டத்தில் 55 பறவைகளும், சூரத் மாவட்டத்தில் புதன்கிழமை 4 பறவைகளும் உயிரிழந்தன. இருப்பினும், குஜராத்தில் பறவைக் காய்ச்சல் பரவவில்லை என்று மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் குன்வா்ஜி பாவலியா கூறினாா்.

உத்தர பிரதேசத்தில்..: உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் 9 காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா் ஏ.கே.ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘இந்த காகங்கள் அதிக குளிரின் காரணமாக உயிரிழந்திருக்கலாம். சோன்பத்ரா மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், 2 காகங்களின் உடல்கள் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12 இடங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com