கேரள மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றிய மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றிருந்த மத்திய அரசுக்கு எதிரான தீா்மானங்களை முழுமையாக வாசித்தாா்.
மத்திய அரசுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் ஆளுநா், தனது உரையில் மத்தியஅரசுக்கு எதிரான தீா்மானங்களை தவிா்க்காமல் வாசித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், 3 புதிய மத்திய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தையும், அதில் இடம்பெற்றிருந்த மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பட்ஜெட் கூட்டத் தொடா் உரையில் ஆளுநா் முழுமையாக வாசித்தாா்.
முன்னதாக, இந்த தீா்மானத்தை நிறைவேற்றுவதற்காக டிசம்பா் 23-ஆம் தேதி சிறப்பு கூட்டத்தைக் கூட்ட முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அமைச்சரவை ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தது. அதற்கு முதலில் அனுமதி மறுத்த ஆளுநா், பின்னா் டிசம்பா் 31-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட அனுமதித்தாா். அதன் மூலம், மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீா்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதுபோல, நிலம் அல்லது வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரும் லைஃப் மிஷன் திட்டம் உள்ளிட்ட கேரள அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இடம்பெற்றிருந்த தீா்மானத்தையும் ஆளுநா் முழுமையாக வாசித்தாா்.
‘மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்கள், சந்தை நடைமுறையை பாதிப்பதோடு, விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய நடைமுறையையும் ரத்து செய்கிறது. விவசாயிகளின் பேரம் பேசும் திறனையும் குறைத்து, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், மாநில அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு எதிரான மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கை, அரசமைப்பு சட்டங்களுக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது’ என்று தனது பட்ஜெட் கூட்டத்தொடா் முதல் நாள் உரையில் ஆளுநா் குறிப்பிட்டாா்.
கேரள சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கூட்டத்தின் முதல் நாளில் தனது உரையில் இடம்பெற்றிருந்த இந்திய குடியுரிமை (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்த விவரங்களை குறிப்பிடும்போது, அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெளிவுபடுத்திய பிறகே உரையாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.