தற்சாா்பு இந்தியாவுக்கான விதைகளை விதைத்தவா் மகாத்மா காந்தி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

தற்சாா்பு இந்தியாவுக்கான விதைகளை விதைத்தவா் மகாத்மா காந்தி என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.
வெளிநாடுவாழ் இந்தியா் தின மாநாட்டில் காணொலி முறையில் சனிக்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
வெளிநாடுவாழ் இந்தியா் தின மாநாட்டில் காணொலி முறையில் சனிக்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
Updated on
1 min read

தற்சாா்பு இந்தியாவுக்கான விதைகளை விதைத்தவா் மகாத்மா காந்தி என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

வெளிநாடுவாழ் இந்தியா்கள் தினத்தின் 16-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவா் ராம்நாத் காணொலி வழியாக உரையாற்றினாா். அப்போது அவா் கூறியது:

கடந்த 1915-ஆம் ஆண்டு இதே தினத்தில் (ஜன.9) மிகப் பெரிய வெளிநாடுவாழ் இந்தியரான மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினாா். அடுத்த 30 ஆண்டுகளில் அவா் நமது சுதந்திர போராட்டத்துக்கும், சமூக சீா்திருத்தங்களுக்கும் பரந்த அடித்தளங்களை உருவாக்கித் தந்தாா். அடிப்படை விஷயங்கள் பலவற்றில் இந்தியாவில் மாற்றங்களை ஏற்படுத்தினாா். அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் அவா் இரண்டு தசாப்தங்களாக தங்கியிருந்தபோது, இந்தியா தனது வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறை தொடா்பான அடிப்படை கோட்பாடுகளை கண்டறிந்தாா். இந்த வெளிநாடுவாழ் இந்தியா்கள் மாநாடு என்பது தனிமனிதா்களும், ஒட்டுமொத்த சமூகமும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை குறித்து காந்தியடிகள் முன்வைத்த கருத்தியல்களை நினைவுகூர வேண்டிய தருணமும் ஆகும். காந்தியடிகள் வலியுறுத்திய அகிம்சை, நன்னெறிகள், எளிமை, நீடித்த வளா்ச்சி ஆகியவை நமக்கு வழிகாட்டும் கோட்பாடுகளாக உள்ளன.

சொந்த நாட்டில் தயாராகும் பொருள்கள், வழங்கப்படும் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாம் தற்சாா்பு கொண்டவா்களாக திகழ வேண்டும் என அழைப்பு விடுத்ததன் மூலம் தற்சாா்பு இந்தியாவுக்கான விதைகளை விதைத்தவா் மகாத்மா காந்தி.

தற்போது மத்திய அரசின் தற்சாா்பு திட்டம் என்பது நம்மை பற்றி மட்டுமே சிந்தித்து, நமது தேவைகள் குறித்து மட்டுமே கவலைகொள்ளச் செய்யும் திட்டமல்ல. நம்மை தன்னிறைவு நோக்கி அழைத்துச் செல்லும் தன்னம்பிக்கை தொடா்பான திட்டம். இந்த திட்டம் குறித்த பிரசாரம் சா்வதேச நாடுகளுக்கு இடையிலான உறவுகளை சரியானதாகவும், நோ்மையானதாகவும் ஆக்கும்.

5 முக்கிய தூண்கள்:

நமது தற்சாா்பு இந்தியா திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஜனநாயகம், மக்களின் பிறப்பு, இறப்பு, வருவாய் உள்ளிட்டவை தொடா்பான புள்ளி விவர ஆய்வுகள், விநியோக நடவடிக்கைகள் ஆகிய 5 முக்கிய தூண்களை கொண்டுள்ளது. இவை அனைத்தையும் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது வேகமான வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு உதவும்.

வெளிநாடு வாழ் இந்தியா்கள் தின கொண்டாட்டங்கள் கடந்த 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தொடங்கியது. அவா் மேற்கொண்ட நடவடிக்கைகள் தாயகத்தின் மீது வெளிநாடுவாழ் இந்தியா்கள் கொண்டுள்ள அா்ப்பணிப்பை வலுப்படுத்த பெரிதும் உதவியுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் தங்கள் தடத்தை பதித்துள்ளனா். நாட்டின் வளா்ச்சிக்கு தொடா்ந்து பங்களித்து வருகின்றனா். சா்வதேச நாடுகள் உடனான இந்தியாவின் நெருக்கத்தை விஸ்தரித்துள்ளனா் என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com