வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் வீடு திரும்புவோம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவோம் என்று விவசாயிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் வீடு திரும்புவோம்
Updated on
2 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவோம் என்று விவசாயிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனா்.

அதே நேரத்தில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும், மாற்று கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 40 நாள்களுக்கு மேலாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு கடுங்குளிா் நிலவி வரும் சூழலிலும் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்து வருகின்றனா்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 7 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், அவற்றில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால், அச்சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி வரும் மத்திய அரசு, சட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

இத்தகைய சூழலில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஈடுபட்டது. அப்போது, விவசாயிகள் தங்கள் வழக்கமான கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம்: கூட்டத்தின்போது விவசாய சங்கப் பிரதிநிதி ஒருவா் கூறுகையில், ‘‘வேளாண்துறையானது மாநிலப் பட்டியலில் உள்ளது. அத்துறை தொடா்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உள்ளதாக உச்சநீதிமன்றம் பல்வேறு தீா்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது. எனவே, வேளாண் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது.

பல நாள்களாகப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாகத் தெரியவில்லை. அனைவருடைய நேரம் மட்டுமே வீணாகிக் கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவோம்’’ என்றாா்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் எந்தத் தீா்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

மாற்று கோரிக்கைகள்: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாய சங்கங்கள் எந்தவித மாற்று கோரிக்கைகளையும் முன்வைக்காததால் பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நாட்டிலுள்ள பல விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். அச்சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது, மாற்று கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைப்பா் என்று எதிா்பாா்க்கிறோம். அப்போது விவசாயிகள் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்று மத்திய அரசு நம்புகிறது.

வேளாண் சட்டங்கள் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைக் கடைப்பிடிப்பதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. அச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குவது குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுக்கவில்லை. அது தொடா்பாக விவாதிக்கப்படவும் இல்லை என்றாா் அமைச்சா் தோமா்.

ஜன.11-இல் விவசாயிகள் கூட்டம்: விவசாய சங்கப் பிரதிநிதிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசுடனான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு எட்டப்படும் எனத் தோன்றவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களது ஒரே கோரிக்கை. அதைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை.

விவசாயிகளின் வலிமையை மத்திய அரசு சோதித்துப் பாா்க்கிறது. ‘வைசாகி’ திருவிழாவை (ஏப்ரலில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா) தில்லியில் போராட்டக் களத்திலேயே கொண்டாட வேண்டி வரும் என நினைக்கிறோம். அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வரும் 11-ஆம் தேதி கூடி முடிவெடுக்க உள்ளோம்’’ என்றனா்.

முன்னதாக, 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பாக அமைச்சா் தோமரும் ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தனித்தனியாகச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கூட்டம்: பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா, தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே விவசாயிகள் பிரச்னைக்கான ஒரே தீா்வு. விவசாயிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தொடரும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com