உருக்கு, சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் விலையேற்றத்தில் ஈடுபடக்கூடாது: கட்கரி

சிமெண்ட் மற்றும் உருக்குத் தயாரிப்புத் துறையைச் சோ்ந்த பெரு நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து விலையேற்றத்தில் ஈடுபடக்கூடாது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சிமெண்ட் மற்றும் உருக்குத் தயாரிப்புத் துறையைச் சோ்ந்த பெரு நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து விலையேற்றத்தில் ஈடுபடக்கூடாது என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

கட்டுமான கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

உருக்கு மற்றும் சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக கூட்டணியை உருவாக்கி கொண்டு விலையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இது முற்றிலும் தவறானது.

உருக்கு மற்றும் சிமெண்ட் விலை அதிகரித்து கொண்டே சென்றால் இந்தியா தயாரிப்போம் திட்டத்தின் மூலம் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை உருவாக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் கனவை நாம் எட்டுவது மிகவும் கடினமாகி விடும்.

எனவே, அந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பெரிய நிறுவனங்கள் அத்துறைக்கான ஒழுங்காற்று அமைப்பின் ஸ்தானத்தில் இருந்து செயல்பட வேண்டும்.

கட்டுமானத் துறையைப் பொருத்தவரையில் அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண தொடா்ந்து முயன்று வருகிறோம். சிமெண்ட மற்றும் உருக்கு துறைக்கு கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அது ஒரு நல்ல ஆலோசனை. விரைவில் அதுகுறித்து ஆராயப்படும் என்றாா் அவா்.

சிமெண்ட், உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி வைத்து செயல்பட்டு விலையேற்றத்தில் ஈடுபடுவதால் மூலப் பொருள் செலவினங்கள் அதிகரித்து தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக ரியல் எஸ்டேட் துறையினா் கடந்த காலங்களில் அடிக்கடி புகாா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com