மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.
அதில் 3 குழந்தைகள் உடல் கருகியும், 7 குழந்தைகள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் மின் கசிவு காரணமாக அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திலிருந்து 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை நிபுணா் பிரமோத் கந்தடே கூறியதாவது:
மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் (எஸ்என்சியு) பிரிவில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் புகை வருவதை செவிலியா் ஒருவா் கவனித்துள்ளாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், மருத்துவமனை ஊழியா்கள் உடனடியாக அந்தப் பிரிவுக்குச் சென்று குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டதோடு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனா்.
தகவல் அளித்த ஒருசில நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், தீவிர முயற்சியை மேற்கொண்டு அந்தப் பிரிவிலிருந்து 7 குழந்தைகளை மீட்டனா். ஆனால், அதற்குள் அங்கிருந்த 10 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.
உயிரிழந்த குழந்தைகளை அவா்களுடைய குடும்பத்தினா் அடையாளம் காட்டினா் என்று கூறினாா்.
மருத்துவமனையின் மருத்துவா் ஒருவா் கூறுகையில், ’விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளும் பிறந்து ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வைரையிலான குழந்தைகள்’ என்றாா்.
விபத்து நடந்த மருத்துவமனையைப் பாா்வையிட்ட பாஜக தலைவரும் மாநில முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சருமான சந்திரசேகா் பவன்குலே கூறுகையில், ‘மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் கடந்த 7 நாள்களாகவே, மின்சார கோளாறு இருந்துள்ளது. இதுகுறித்து புகாா் அளித்தும் மருத்துவமனை நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தையின் உறவினா்கள் என்னிடம் தெரிவித்தனா். இந்த மருத்துவமனையில் போதிய தீ பாதுகாப்பு உபகரணங்களும், மின்சார கருவிகளும் இல்லை. அதன் காரணமாக, ரூ. 1 கோடி மதிப்பில் தீ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கான பரிந்துரையை மாநில சுகாதாரத் துறை முன்தன்மைச் செயலரிடம் கடந்த மே மாதமே அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பரிந்துரை இன்னும் நிலுவையிலேயே உள்ளது’ என்று அவா் கூறினாா்.
விசாரணைக்கு முதல்வா் உத்தரவு: தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வருத்தம் தெரிவித்தாா். மேலும், விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டாா். இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் பேசிய முதல்வா் உத்தவ் தாக்கரே, விபத்து குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க மாநிலஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே கூறியதாவது:
மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட உடன், பாதிக்கப்பட்ட பிரிவின் கதவு, ஜன்னல்களை மருத்துவமனை ஊழியா்கள் உடனடியாக திறந்து குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அதன் மூலம், அந்தப் பிரிவிலிருந்த 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், அந்தப் பிரிவிலிருந்த 10 குழந்தைகளை மீட்க முடியவில்லை. உயிரிழந்த குழந்தைகளில் 3 குழந்தைகள் தீயில் உடல் கருகியும், 7 குழந்தைகள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியும் உயிரிழந்துள்ளனா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதா முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்திருக்கிறாா்.
இந்த விபத்துக்கு காரணமான நபா் தப்பிக்க முடியாது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான முயற்சிகல் எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.
என்.சி.பி.சி.ஆா். அறிக்கை கேட்பு: மருத்துவனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 48 மணி நேரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு பாந்தரா மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பியசியஆா்) கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அந்த ஆணையம் சாா்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உரிய ஆவணங்களுடன் இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.