மகாராஷ்டிரத்தில் தொடர்மழை: இதுவரை 192 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் தொடர்மழையால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 192 ஆக உயர்ந்தது;
மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், சிரோலியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், சிரோலியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

மும்பை / ஜெய்ப்பூர் / ஆமதாபாத்: மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் தொடர்மழையால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 192 ஆக உயர்ந்தது; தவிர நூற்றுக்கு மேற்பட்டோரைக் காணவில்லை. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் திங்கள்கிழமை பல பகுதிகளில் கனமழை பெய்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 8 நாட்களாகப் பெய்துவரும் பலத்த மழை மற்றும் வெள்ளச் சேதத்தால் பலியானோரின் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. ராய்கட்டில் மேலும் 28 சடலங்களும், வார்தா, அகோலாவில் தலா 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 2,29,074 பேர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை ராய்கட் மாவட்டத்தில் 95, சதாராவில் 45, ரத்னகிரியில் 21, தாணேயில் 12, கோலாப்பூரில் 7, மும்பையில் 4 பேர், சிந்துதுர்க், புணே, வார்தா, அகோலா ஆகிய இடங்களில் தலா இருவர் உயிரிழந்தனர். மழை பாதிப்புகளில் சிக்கி 56 பேர் காயமடைந்துள்ளனர். அதேசமயம் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட சாங்லி மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் துணை முதல்வர் அஜித் பவார் மீட்புப் படகில் திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். 
குஜராத்தில் பலத்த மழை: குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன; பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்,  குஜராத் மாநிலம் முழுவதும் அதிக மழை பெய்துள்ளது. செüராஷ்டிரத்தின் ராஜ்கோட் மாவட்டம், லோதிகா தாலுகாவில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பலத்த மழை காரணமாக இரு மாநில நெடுஞ்சாலைகள், பல்வேறு கிராமச் சாலைகள் உள்பட மொத்தம் 56 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.  

சோட்டா உதேப்பூர் மாவட்டம், சோட்டா உதேபூர் தாலுகாவில் 190 மி.மீ., குவான்டில் 182 மி.மீ, மேஹ்சானா மாவட்டம்} பெச்சராஜியில் 160 மி.மீ., ஜாம்நகர் மாவட்டம்} கலாவட்டில் 147 மி.மீ.,  நர்மதா மாவட்டம்} திலக்வாடாவில் 142 மி.மீ., வல்சாட் மாவட்டம்} கப்ரதாவில் 142 மி.மீ., ஜுனாகத் மாவட்டம்} மானவதரில் 134 மி.மீ., போர்பந்தர் மாவட்டம்} குடியானாவில் 128 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 

வதோதரா, பஞ்ச்மஹால், கேடா, ஆரவல்லி, மோர்பி, ஆமதாபாத் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் சராசரியாக 60 மி.மீ. மழை பொழிந்துள்ளது. 
அடுத்த 24 மணிநேரத்தில் ஜாம்நகர், கிர்}சோம்நாத், வல்சாட் மாவட்டங்களில் பலத்த மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே ஜூலை 29ஆம் தேதி வரையிலும் மீன் பிடிக்க அரபிக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் கனமழை: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. 
ஜலாவர் மாவட்டம், காக்ரோன் நகரில் 250 மி.மீ. அதிகபட்ச மழை பதிவானது.

பாலி மாவட்டம், மார்வார் சந்திப்புப் பகுதியில் 205 மி.மீ. மழைப் பொழிவு காணப்பட்டது. ஜலாவர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், பில்வாரா, சிரோஹி, சித்தூர்கர், துங்கார்பூர், உதய்பூர், ராஜ்சமந்த், பாலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

பரத்பூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.ன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com