நீதிபதி மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் நீதிபதி மரணித்த வழக்கில் ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் நீதிபதி மரணித்த வழக்கில் ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை இயக்குநருக்கும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி. ரமணா உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுகுறித்து ரமணா கூறுகையில், "இந்த வழக்கு பல விதமான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதிபதிகளுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நிகழ்கிறது. இதனை விசாரிக்க விரும்புகிறோம். அனைத்து மாநில அரசுகளும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றிய உத்தம் ஆனந்த், கடந்த 28-ஆம் தேதி காலை நடைபயிற்சி சென்றார். அப்போது, சாலையில் அவருக்குப் பின்னால் சென்ற வாகனம் ஒன்று வேகமாக அவா் மீது மோதும் சிசிடிவி காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். அவருக்கு சிகிச்சைகள் அளித்தபோதும், அவை பலனளிக்காமல் நீதிபதி உயிரிழந்தார். முதலில் இந்தச் சம்பவம் சாலை விபத்தாகவே கருதப்பட்டது. விபத்தில் காயமடைந்த உத்தம் ஆனந்தின் அடையாளமும் ஆரம்பத்தில் தெரியவில்லை.

நீதிபதி உத்தம் ஆனந்தைக் காணவில்லை என்று அவரின் உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதையடுத்தே மருத்துவமனையில் உயிரிழந்தவா் நீதிபதி என்பது தெரிய வந்தது.

நீதிபதி மீது கார் மோதும் காணொலி அதிகமாகப் பகிரப்பட்ட பிறகே இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை தொடங்கியது. கொலை வழக்கு பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் தொடா்பாக இருவரைக் கைது செய்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

நீதியைக் காக்கும் விவகாரத்தில் மாவட்ட நீதிபதிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மாவட்ட கூடுதல் நீதிபதி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com