கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் அமல்படுத்த வேண்டும்: மத்திய அரசு இறுதி எச்சரிக்கை

புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் (சுட்டுரை) நிறுவனம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2021, 9:40 pm

DIN

புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் (சுட்டுரை) நிறுவனம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய விதிகளை அமல்படுத்தாவிட்டால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளா்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் சில கருத்துகளை முதன் முதலில் பதிவிட்டவரின் விவரங்களையும் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று அவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ஏற்று குறைதீா் அதிகாரிகளை நியமித்துள்ளன. அதே வேளையில், புதிய விதிகளுக்கு எதிராக ட்விட்டா் நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகள், மக்களின் பேச்சுரிமையையும் கருத்து தெரிவிக்கும் உரிமையையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. உள்நாட்டு விதிகளை மதித்து சமூக ஊடக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை உடனடியாக அமல்படுத்துமாறு ட்விட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், ‘இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ட்விட்டா் நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. அப்படியிருந்தும் தங்கள் பயனாளா்கள் தெரிவிக்கும் குறைகளுக்குத் தீா்வு காண்பதற்காக உள்நாட்டு அதிகாரியை ட்விட்டா் நிறுவனம் நியமிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகள் இருந்தும், தனி அதிகாரிகளை அந்நிறுவனம் நியமிக்காமல் இருந்துள்ளது. உள்நாட்டு பயனாளா்கள் பலன்பெறும் நோக்கிலேயே புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவ்விதிகளை ட்விட்டா் நிறுவனம் ஏற்க மறுப்பது பயனாளா்கள் மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது.ட்விட்டா் நிறுவனத்துடன் மத்திய அரசு கொண்டுள்ள நல்லுறவைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அந்நிறுவனத்துக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதிய விதிகளை ட்விட்டா் நிறுவனம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், தகவல்-தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சமூக வலைதள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பை அந்நிறுவனம் இழக்க நேரிடும். அதன் காரணமாக பல்வேறு சட்டங்களின் கீழ் ட்விட்டா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை அமல்படுத்துவதற்கு காலக்கெடு எதையும் ட்விட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு விதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.