பெட்ரோல், டீசலை இலவசமாக வழங்கிய பெட்ரோல் நிலையம்

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலை இலவசமாக வழங்கிய பெட்ரோல் நிலையம்
பெட்ரோல், டீசலை இலவசமாக வழங்கிய பெட்ரோல் நிலையம்


காசர்கோடு: பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100க்கும், டீசல் சுமார் ரூ.95க்கும் விற்பனையாகிவிரும் நிலையில், இந்தச் செய்தி நிச்சயம் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம்.

அதாவது, காசர்கோடு அருகே மிகவும் ஊரகப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பெட்ரோல் நிலையத்தில், கடந்த திங்களன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மூன்று லிட்டர் எரிபொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

பெர்லா என்ற இடத்தில் அமைந்துள்ள குடுகோலி பெட்ரோல் நிலையத்தில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் எரிபொருள் இலவசமாக வழங்கப்பட்டதாக பெட்ரோல் நிலையத்தை நிர்வகித்து வரும் சித்தீக் மதுமோலே தெரிவித்துள்ளார். 

ஊரகப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பெட்ரோல் நிலையத்தில் காலை முதல் இரவு வரை 313 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது. ஊரகப் பகுதி என்பதால் வழக்கமாக இங்கு நாள் ஒன்றுக்கு 300 வாடிக்கையாளர்கள் எல்லாம் வர மாட்டார்கள். பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், ஒரு லட்சம் மதிப்பிலான பெட்ரோல், டீசலை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த பெட்ரோல் நிலையம் சித்தீக்கின் மூத்த சகோதரர் அப்துல்லா மதுமோலேவுக்குச் சொந்தமானது. அவர் அபு தாபியில் பட்டயக் கணக்காளராக பணியாற்றி வருகிறார். அவர் தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கும் முடிவை அவர்தான் எடுத்தார். இது வணிக நோக்கத்துக்காக செய்யப்பட்டதல்ல, அறக்கட்டளை மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார் சித்தீக். 

ஒரு ஆட்டோ ஓட்டுநர் இது பற்றி கூறுகையில், 37 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் எனது அனுபவத்தில், ஒரு பெட்ரோல் நிலையமும் இலவசமாக எரிபொருள் வழங்கியதாகக் கேள்விப்பட்டது கூட இல்லை. நான் 15 கி.மீ. தூரத்திலிருந்து வந்து இலவசமாக டீசல் வாங்கிச் செல்கிறேன். அதற்கே ஒரு லிட்டர் செலவாகிவிடும் என்றாலும் மீதம் 2 லிட்டர் கிடைக்குமல்லவா என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com