எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் மோடிதான் 'நம்பர் 1': மத்திய அமைச்சர்

பாஜகவுக்கு எதிராக எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் பிரதமர் நரேந்திர மோடிதான் 'நம்பர் 1' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாஜகவுக்கு எதிராக எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் பிரதமர் நரேந்திர மோடிதான் 'நம்பர் 1' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணியை அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திட்டமிட்டு வருகிறார். தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடனான இரண்டு சந்திப்பில் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, தில்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார் சரத் பவார்.

இதுபற்றி மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கூறியதாவது:

"எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை வலுவாக உள்ளது. இன்றைக்கும் அவர்தான் 'நம்பர் 1'. சரத் பவார் மீதும் எங்களுக்கு மரியாதை உள்ளது. அவர் மகாராஷ்டிரத்தில் பிரபலமான தலைவர். நிறைய நற்பணிகளையும் செய்துள்ளார். 

ஆனால், இன்றைய சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரத்தில் மட்டுமே உள்ளது. மகாராஷ்டிரத்துக்கு வெளியே எந்த மாநிலங்களிலும் பெரிய ஆதரவு இல்லை. 

இந்த அணியில் மம்தா பானர்ஜி இணைவாரா என்பதும் சந்தேகம்தான். எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  

அனைவருக்கும் தேர்தலில் அணியை உருவாக்க உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் வெற்றி பெற அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதேசமயம், நரேந்திர மோடியை வீழ்த்துவதும் எளிதல்ல. சரத் பவார் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என்று நினைக்கிறேன். 

பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை 2019 தேர்தலில் அவர் எங்கள் பக்கம் இல்லை. நரேந்திர மோடி அரசு 303 இடங்களில் வென்றது. 2014-இல் அவர் எங்களுடன் இருந்தபோது பாஜக 222 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2024-இல் நாங்கள் 350 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com