கரோனா: கழிவு நீர், காற்றை கண்காணிக்கும் முறை குறித்து வெங்கைய நாயுடுவிடம் சிஎஸ்ஐஆர் விளக்கம்

கரோனா தொற்றைக் கண்டறிய, கழிவுநீர் மற்றும் காற்று கண்காணிப்பு முறையை நாடாளுமன்றத்தில் அமைப்பது குறித்து,
கரோனா: கழிவு நீர், காற்றை கண்காணிக்கும் முறை குறித்து வெங்கைய நாயுடுவிடம் சிஎஸ்ஐஆர் விளக்கம்
கரோனா: கழிவு நீர், காற்றை கண்காணிக்கும் முறை குறித்து வெங்கைய நாயுடுவிடம் சிஎஸ்ஐஆர் விளக்கம்
Published on
Updated on
1 min read


புது தில்லி: கரோனா தொற்றைக் கண்டறிய, கழிவுநீர் மற்றும் காற்று கண்காணிப்பு முறையை நாடாளுமன்றத்தில் அமைப்பது குறித்து, குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான எம். வெங்கைய நாயுடுவிடம், அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் மருத்துவர் சேகர் சி.மாண்டே இன்று விளக்கினார்.

அப்போது மருத்துவர் மாண்டேவுடன், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் மருத்துவர் ராகேஷ் மிஸ்ரா, இந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர், மருத்துவர் வெங்கட மோகன், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மருத்துவர்அட்யா கப்லே ஆகியோர் உடன் இருந்தனர்.

சிஎஸ்ஐஆர் ஆய்வு மையங்களில் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் துணைத்தலைவருக்கு மருத்துவர் மாண்டே விளக்கினார்.

கழிவுநீர் கண்காணிப்பானது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டை சரியாக வழங்குவதாகவும், அதிக அளவிலான மக்களுக்கு கரோனா பரிசோதனை சாத்தியமில்லாத போது, கொவிட்-19 தொற்றின் முன்னேற்றத்தைக் கண்டறிய இந்த முறையைப் பயன்படுத்தலாம் எனவும் குடியரசுத் துணைத்தலைவரிடம், மருத்துவர் மாண்டே தெரிவித்தார். இது, சமூகத்தில் நோய் பரவும் நேரத்தில், விரிவாக கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

கழிவுநீர் கண்காணிப்பு குறித்து விரிவாக விளக்கிய மருத்துவர் மாண்டே, கொவிட்-19 நோயாளிகள், மலக்கழிவுகள் மூலமாகவும் கரோனா வைரஸ்களை வெளியேற்றுகின்றனர் என்றும் கரோனா அறிகுறி உள்ளவர்கள் தவிர, அறிகுறி அற்றவர்களும், தங்கள் மலக்கழிவு மூலமாக வைரஸ்களை வெளியேற்றுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஐதராபாத், பிரயாக்ராஜ் (அலகாபாத்) தில்லி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில், தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர் கண்காணிப்பு விவரங்களை மருத்துவர் மாண்டே எடுத்துரைத்தார். இந்தப் பரிசோதனை, தனிநபர் அளவில் மேற்கொள்ளப்படாததால், இது பாரட்சமற்ற மதிப்பீட்டை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கழிவு நீர் கண்காணிப்பு முறை, தற்போதைய கொவிட்-19 தொற்றைப் புரிந்து கொள்வதில் மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும், கொவிட்-19 தொற்றுப் பரவலை முன்கூட்டியே எளிதாக கண்டறியவும், இன்றியமையாததாக இருக்கும் என மாண்டே கூறினார்.

காற்றில் உள்ள வைரஸ் துகள்கள் மற்றும் தொற்று பரவல் அபாயத்தைக் கண்டறிய, காற்றை கண்காணிக்கும் கருவிகளையும் பொருத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறினார். சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகளையும், அவர்களது பணியையும் குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டினார். 

மேலும், இந்த விஷயம் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அரசிடம் தாம் ஆலோசிப்பதாக, விஞ்ஞானிகள் குழுவினரிடம் குடியரசுத் துணைத்தலைவர்  தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com