நாட்டில் கரோனா பாதிப்பு சூழல் சீராகி வருகிறது:மத்திய அரசு
இந்தியாவில் கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான சூழல் சீரடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான சூழல் சீரடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலா் லவ் அகா்வால், நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால், எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா ஆகியோா் கூட்டாக சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கூறுகையில், ‘கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்து வருகிறது. கடந்த வாரம் நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் ஒட்டுமொத்த விகிதம் 21.9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 19.8 சதவீதமாக குறைந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.
சீராகி வருகிறது:
நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால் கூறுகையில், ‘சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது தெளிவாக தெரிகிறது. சில மாநிலங்களின் நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது. சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான சூழல் சீரடைந்து வருகிறது. இதனை மேலும் சீராக்கி கரோனா பாதிப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தாா்.
பூஞ்சைத் தொற்றால் அதிக மரணம்:
‘கரோனா பாதிப்புக்குப் பின் ஏற்படும் கருப்பு பூஞ்சை, பாக்டீரியா போன்ற தொற்றுகளால் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. மியூகோா்மைகோசிஸ் கருப்பு பூஞ்சைத் தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா நோயாளிகள் அதிகரிக்கும்போது மருத்துவமனைகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுவது மிக முக்கியம்’ என்று எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா தெரிவித்தாா்.
‘நாட்டில் உள்ள மொத்த கரோனா நோயாளிகளில் 85 சதவீதம் போ் 10 மாநிலங்களில் உள்ளனா்.
11 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கும் அதிகமாகவும், 17 மாநிலங்களில் தலா 50,000-க்கும் குறைவாகவும், 8 மாநிலங்களில் தலா 50,000 முதல் 1 லட்சம் வரையிலும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வரும் மகாராஷ்டிரம், குஜராத், சத்தீஸ்கா் மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
24 மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. தில்லி, ஹரியாணா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், டாமன் மற்றும் டையூவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 36,73,802-ஆக குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 15.07 சதவீதம் ஆகும். தேசிய அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் விகிதம் 83.83 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...